ஆழியாற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை

சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) பேசியதாவது: வால்பாறை தொகுதியில் வரையாறு, உப்பாறு, பொள்ளாச்சியில் கோதையாறு, குள்ளி செட்டிப்பாளையம் ஆறு, செல்லப்பம்பாளையம்  ஆறு, கிணத்துக்கடவில் வரட்டாறு, பாலாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இப்படிப்பட்ட ஆறுகளோடு பாப்பாத்தி பள்ளம், புங்கன்கடவுப் பள்ளம், பாவரைப் பள்ளம், கொளத்துப் பள்ளம், தூனக்கடவு பள்ளம், வாகரையாறு பள்ளம், மைலம்பாறைப் பள்ளம் போன்றப் பள்ளப் பகுதிகளிலும் தேவையான இடங்களில்  தடுப்பணைகள் கட்டி, பெய்கின்ற மழை நீரில், ஒரு சொட்டு நீர்கூட கேரள மாநிலத்திற்குச் சென்று, அரபிக் கடலில் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் பரம்பிகுளம் ஆழியாறு திட்ட நீர்பிடிப்புப் பகுதிகளில் கூடுதலாக பெய்யும் மழை நீர் கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக, மழை நீரை  சேமித்து பயன்படுத்தும் வகையில் மேலும் கூடுதலாக தடுப்பணைகள் கட்டுதல் குறித்தான கருத்துக்களுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளன. மேலும், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில்  தடுப்பணைகள் கட்டி நீரை தேக்குவது தொடர்பான கருத்துக்கள் கேரளா மாநில அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்ட பின் மேல் நடவடிக்கை தொடரப்படும்.

Related Stories: