×

இ-சேவை மையம் மூடல், வீட்டுமனை பட்டா விவகாரம் திமுக எம்எல்ஏவுடன் முதல்வர் எடப்பாடி 3 அமைச்சர்கள் நேருக்கு நேர் மோதல்

சட்டப்பேரவையில் வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன்(திமுக) பேசியதாவது: 2015ம் ஆண்டு தமிழகத்தில் 900 இடங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டது. இப்போது 587 மட்டும் தான்  இயங்கி கொண்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை 318 இடங்களில் தான் இசேவை மையங்கள் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த 318ல் 186 மையங்கள் இன்றைக்கு இயங்காத சூழல் இருந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 32 வருவாய் மாவட்டங்களில் 15 ஆயிரத்து 72 பொது இசேவை மையங்கள் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் அருகிலேயே சான்றிதழ்களை பெறலாம் என்ற நிலை  ஏற்பட்டுள்ளது.அமைச்சர் மணிகண்டன்: பொதுவாக போதுமான வரவேற்பு இல்லாத, வருமானம் இல்லாத இசேவை மையங்களை மூடி விட்டு, அதனை மற்றொரு இசேவை மையத்துடன் இணைத்து வருகிறோம்.மா.சுப்பிரமணியன்: பள்ளிகளில் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கூறுகிறார். இதனை திமுக ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வந்து விட்டோம். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: நீங்கள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக கொண்டு வந்தீர்கள். நாங்கள் 6ம் வகுப்பு முதலே சான்றிதழ் பெறும் முறையை கொண்டு வந்து விட்டோம்.மா.சுப்பிரமணியன்: திமுக ஆட்சியில் 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, 4 ஆண்டுகளில் மட்டும் வருவாய் துறையின் மூலம் தமிழகத்தில் 7 லட்சத்து 65 ஆயிரம் ஆதரவற்றோருக்கு உதவி தொகை வழங்கியுள்ளோம். ஆனால் இந்த அரசு  தொடர்ந்து உதவி பெறுபவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வருகிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: திமுக ஆட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் உதவித்தொகை வழங்கப்பட்டது.ஐ.பெரியசாமி(திமுக): திமுக ஆட்சியில் தகுதியானவர்களுக்கு தான் உதவி தொகை வழங்கப்பட்டது. 12 லட்சம் பேருக்கு நாங்கள் உதவித்தொகை வழங்கியுள்ளோம்.அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:  குறைந்த வயது உடையவர்களுக்கெல்லாம் நீங்கள் உதவித்தொகை வழங்கினீர்கள். இதை என்னால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். அமைச்சர் உதயகுமார்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் முதியோருக்கான உதவித்தொகை 500லிருந்து ₹1000 ஆக உயர்த்தினார். உங்கள் ஆட்சியில் 1,500 கோடி அளவில் தான் நிதி ஒதுக்கப்பட்டது. 4.600 கோடி ஒதுக்கப்பட்டது.  உங்களை விட கூடுதலாக ₹3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. மா.சுப்பிரமணியன்: திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக 2950 பேருக்கு பட்டாக்களை வழங்கினோம். ஆனால் அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகளில் இதுவரை எங்கேயும் இது போன்ற பெரிய அளவிலான பட்டாக்களை வழங்கிய வரலாறு இல்லை.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: உங்கள் ஆட்சியை விட கூடுதலாகவே ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது. 20 லட்சம் என்று தீர்மானித்து 23 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கியிருக்கிறோம்.

மா.சுப்பிரமணியன் (தி.மு.க.): சென்னையில் ஒட்டு மொத்தமாக 20 முதல் 30 சதவீதம் வரையிலான இடங்கள் தான் அரசு புறம்போக்காகவும், நத்தம் புறம்போக்காகவும் இருக்கின்றன. அவற்றுக்கு பட்டாக்கள் தருவதற்கு திமுக ஆட்சியில்  தனியாக வட்டாட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது நடைபெறவில்லை. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:  இந்த அரசு ஏழைகளுக்கு பட்டா மட்டும் அல்ல வீடுகளே கட்டி கொடுக்கும். மா.சுப்பிரமணியன்: சோளிங்கநல்லூரில் தாமரைபேரி என்ற இடத்தில் ஏரியில் போலீஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அரசு நீர்நிலையை ஆக்கிரமிக்கலாமா?. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் திருநின்றவூரில் நீர்நிலையில்  சிலருக்கு இடம் ஒதுக்கி கொடுத்தார்கள். இதனால் அப்போது பெரிய பிரச்னை  வந்தது. ஏரிகளில் பட்டாக்களை நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள். அமைச்சர்  உதயகுமார்: நீர்நிலைகளில் தனியார் சிலர் ஆக்கிரமித்து பிரச்னைகளை  உருவாக்கி வருவதை தான் முதல்வர் குறிப்பிட்டார்.

Tags : E-service ,closure, housing , DMK MLA,face
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...