நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக மீண்டும் கடிதம் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டலாம்

* மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் விளக்கம் * சட்டசபையில் காரசார விவாதம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மீண்டும் அனுப்பும் கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என்றால் சட்டசபையில் சிறப்பு கூட்டம் கூட்டலாம் என்று எதிர்க்கட்சி  தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் விளக்கம் அளித்தார். பேரவையில் கேள்விநேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2  மசோதாக்களை கடந்த 2017 செப்டம்பர் 22ம் தேதி திருப்பி அனுப்பிவிட்டோம் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் ராஜேஷ் எஸ்.வைத்தியா உயர் நீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த  இரண்டு மசோதாக்களையும் குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அரசியல் சட்டம் 201வது பிரிவின் கீழ் குடியரசு தலைவர் ஒரு மசோதாவை ‘with held’ செய்திருக்கிறேன் என்று சொன்னால் அது  நிராகரிப்பதுதான்.  மசோதாக்களை திருப்பி அனுப்பி 21 மாதங்களுக்கு மேலாகி இருக்கிறது. நாங்கள் குடியரசு தலைவரிடம் காரணம் கேட்டிருக்கிறோம் என்று சட்ட அமைச்சர் இதே அவையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தை இந்த  அவையில் இதுவரை அவர் வைக்கவில்லை.  இதே அவையில் மீண்டும் இன்னொரு முறை புதிதாக 2 மசோதாக்களை இது சம்பந்தமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா?.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்:  வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் ‘ரிட்டர்ன் தி பில்’ என்று தான் இருக்கிறது. தீர்மானத்தை நிராகரிக்கவில்லை. பிரமாண பத்திரத்தில் கூட என்ன  காரணத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது என்று கூறவில்லை. மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதவுள்ளோம். அதற்கும் பதில் தரவில்லை என்றால் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மு.க.ஸ்டாலின்: மத்திய அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்திருக்கக்கூடிய வாசகம் - அவர் ‘ரிஜக்ட்’ செய்யவில்லை என்ற வார்த்தை இல்லை என்று சொல்கிறார். ஆனால், ரிஜக்ட் என்ற அந்த வார்த்தை இருக்கிறது. இல்லை என்று சட்ட  அமைச்சர் இங்கு சொல்கிறார். எனவே இப்பொழுது கூட நான் சொல்கிறேன். 201 பிரிவின்படி, மீண்டும் நாம் ஏற்கனவே நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் பற்றி வலியுறுத்துவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் 2 வருடமாக அதைப்பற்றி  கவலைப்படாமல் இருந்து விட்ட காரணத்தினால், அதனால் இப்பொழுதும் நான் கேட்கிறேன், இப்போதாவது நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும். நம்முடைய மாணவர்களின் வாழ்வாதார பிரச்னை இது. ஆகவே இந்த நீட் பிரச்னையைப்  பொறுத்தவரையில் இப்பொழுது புதிய இரண்டு மசோதாக்களை இன்னும் மூன்று நாட்கள் உள்ள இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றி மீண்டும் வலியுறுத்தக் கூடிய வகையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்குமா? என்பதுதான்  என்னுடைய கேள்வி.சி.வி.சண்முகம் :  ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தனது சார்பில் குறைகளை சொன்னால் அதை சரி செய்து அனுப்புவதில் எந்த தயக்கமும் இல்லை. அதை விடுத்து இப்போது நாம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி  அனுப்பினால் அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பத்தான் செய்வார்கள்.

முதல்வர் எடப்பாடி : ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது நீட் விலக்கு கேட்டு நாங்கள் கொடுத்த மெமோரண்டத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறோம். நேரடியாகவும் இதை தெரிவித்திருக்கிறோம். இப்பொழுதுகூட, சட்டத் துறை  அமைச்சர் சொன்னார், என்ன காரணம் என்று தெரிந்தால்தான், அதை நிவர்த்தி செய்வதற்கு வழிவகை ஏற்படும். மீண்டும் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றி அனுப்புவோம், எந்த காரணமும் இல்லாமல் இதே மாதிரி ரிஜக்ட் செய்தால் என்ன  செய்ய முடியும்.   பலமுறை கடிதம் எழுதப்பட்டு விட்டது.  அந்த கடிதத்திற்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நீதிமன்றத்திலே அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே, சட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.  இப்பொழுது மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அதற்கும் பதில் வரவில்லை என்றால் சிறப்புக் கூட்டம் கூட ஒன்று கூட்டலாம். ஒன்றும் தவறு கிடையாது. மு.க.ஸ்டாலின் : இதுவரையில் காரணத்தை சொல்லவில்லை. மீண்டும் அதே நிலை நீடித்தால் என்ன நிலை? அதுதான் என்னுடைய கேள்வி.முதல்வர் எடப்பாடி : என்ன காரணத்திற்காக திருப்பி அனுப்பப்பட்டது என்று இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.மு.க.ஸ்டாலின் : தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் உங்களுடைய வழக்கறிஞர்கள் ஆஜராகி இருக்கிறார்களா? அப்படி ஆஜராகியிருந்தால் இந்தப் பிரச்னை உங்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும். சி.வி.சண்முகம் : தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த வழக்ைக நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 12 முறை நாங்கள் கடிதம் எழுதி பதில் வரவில்லை. சரியான பதிலை அளித்து விட்டு   நீதிமன்றம் மூலம் விவாதம் செய்ய நடைமுறை இருக்கிறது. இவ்வாறு காரசாரமாக விவாதம் நடந்தது.

பேரவையில் இன்று...

பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். இதை  தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள்.  இதை  தொடர்ந்து முற்பகலில் செய்தி மற்றும் விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சி துறை  மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். பிற்பகலில்  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும்  இறுதியில் செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்  வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், பிற்படுத்தப்பட்டோர்,  மிகவும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Related Stories: