காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனைக்கு 120 கோடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

* காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேண்மைமிகு மையம் ஒன்று 120 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். மாநிலத்தில் உள்ள கூடுதல் ஆரம்ப  சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 105 கோடி செலவில் நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும்.

* “அனைவருக்கும் நலவாழ்வு” திட்டத்தின் கீழ், 296 துணை சுகாதார மையங்களுக்கு 79.93 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை அளிக்க, 67.76 கோடி செலவில் உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.

* 32 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு தீவிர சிகிச்சை மையம் 49 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

600 கோடியில் புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழக அரசு, கடந்த ஆண்டுகளில் பல புதிய பேருந்துகளை பொது மக்களின் சேவைக்கு  அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும், புதிதாக 2,000 பேருந்துகள், 600 கோடியில் அறிமுகப்படுத்தப்படும்.

* பால் உற்பத்தியாளர்களுக்கு  வசதியாக கரூர், தர்மபுரி, தேனி, தூத்துக்குடி கடலூர் ஆகியவற்றை   தலைமையிடமாகக் கொண்டு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்  உருவாக்கப்படும். ஒன்றியங்களை பிரிப்பதன் விளைவாக, ஆவின்  மூலமாக கொள்முதல்  செய்யப்படும் பால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டரிலிருந்து,  35 லட்சம்  லிட்டராகவும்,  ஆவின் பால் விற்பனை 22.5 லட்சம் லிட்டரிலிருந்து,  25  லட்சம் லிட்டராகவும் உயரும்.

இந்தியாவில் 300 கோடிக்கு வண்ண மீன் ஏற்றுமதி

சிதம்பரம் தொகுதி பாண்டியன்(அதிமுக): எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணமீன் விற்பனை மையம் அமைத்தால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.அமைச்சர் ஜெயக்குமார்: வண்ணமீன் வளர்ப்பது ஒரு லாபகரமான தொழில். உலகளவில் அலங்கார மீன் ஏற்றுமதிக்கு நல்ல மார்க்கெட்டிங் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இந்தாண்டு ₹300 கோடி அளவுக்கு வண்ண மீன் ஏற்றுமதி  செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது ₹1500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வண்ண மீன்களை வீட்டில் வளர்த்தால் கூட, மாதம் ₹30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். எனவே, சுய வேலைவாய்ப்பு அடிப்படையில்  இளைஞர்கள் வண்ணமீன் வளர்ப்பதற்கு முன்வந்தால், அவர்களுக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.

பட்டா வீடுகளுக்கு மேல்உயர் மின்அழுத்த கம்பி

செங்கம் கிரி (திமுக): செங்கம் தொகுதிக்குட்பட்ட மேல்கரிப்பூர்  புளியகுயிலம் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் 50 ஆண்டு  காலமாக அரசின் மூலமாக பெறப்பட்ட பட்டா இடத்தில் வீடு கட்டி வாழ்கிறார்கள்.  அந்த  வீடுகளுக்கு மேலே உயரழுத்த மின்கம்பிகள் செல்கிறது. அமைச்சர் தங்கமணி:   வீட்டைக் கட்டியதற்கு பின்னால் அந்த வயரை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு  செலவுகள் அதிகம் ஆகிறது. மேலும் அதற்கு மாற்று இடம் தேடுகின்றபோது அதற்கு  பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் இடத்தைக்  கொடுப்பதற்கு மறுக்கிறார்கள்.  இருந்தாலும் அந்த பகுதியை அதிகாரிகளோடு ஆய்வு செய்து அதற்கு உண்டான  நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு ஆவின் பாலகம் தொடங்க யார் கேட்டாலும் அனுமதி

கேள்வி நேரத்தின் போது ஒரத்தநாடு ராமச்சந்திரன்(திமுக) பேசியதாவது:  ஆவின் பாலகம் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. மூலை முடுக்கெல்லாம் 100க்கும் மேற்பட்ட பாலகங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அவைகளுக்கு எந்த  அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஆவின் பாலகங்கள் தொடங்கலாம். அதற்கு குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம், 10 ஆண்டுகளுக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்துள்ளதற்கான ஆவணங்கள்  உள்ளிட்டவற்றை அந்தந்த மாவட்ட ஆவின் மேலாளருக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட ஆவணங்களை பரிசீலித்து எந்த வில்லங்கமும் இல்லாதபட்சத்தில் அனுமதி வழங்கப்படும்.

தனி மாவட்டமாக தென்காசி அறிவிக்கப்படுமா?

கடையநல்லூர் அபுபக்கர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): திருநெல்வேலி  மாவட்டத்தை பிரித்து தென்காசியை மாவட்டமாக அறிவிக்க உள்ளதாக கேள்விபட்டேன்.  அதை இந்த கூட்டத் தொடருக்குள் அறிவிக்க கேட்டு கொள்கிறேன். அதற்காக  தான்  குற்றால சீசனும் காத்திருப்பதாக நினைக்கிறேன். கடையநல்லூருக்கு  அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் 9 ஆண்டுகளாக கிடப்பில்  கிடக்கிறது. 6000 குடிநீர் இணைப்புகள் புதிதாக வழங்கப்படும் என்று  சொல்லப்பட்டது.  ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.

Related Stories: