ரேபிஸ் நோய் தாக்குதலை தடுக்க சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: நாள் ஒன்றுக்கு 1050 நாய்களுக்கு போட முடிவு

சென்னை: ரேபிஸ் நோய் தாக்குதல் தடுக்க தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரித்துள்ளார்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வெறிபிடித்த தெரு நாய்கள் சாலையில் நடத்து செல்பவர்களை கடித்து விடுகின்றன. இந்நிலையில் தெரு  நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அவற்றின் எண்ணிக்கையை கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சியில் 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் அதிகபட்சமாக அம்பத்தூர்  மண்டலத்தில் 7,383 நாய்களும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 2044 நாய்களும் இருப்பது கண்டறியப்பட்டன.

இந்நிலையில் இந்த நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணியை சென்னை மாநகராட்சி ேநற்று முன்தினம்  தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மாதவரம் மண்டலத்தில் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 7 குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவிற்கு ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை மருத்துவ உதவியாளர்கள், நாய் பிடிப்பவர்கள், உதவியாளர்கள், நாய் வண்டி ஓட்டுபவர்கள் இடம்பெறுவார்கள். இதற்காக ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி போடப்பட்ட தெருநாய்களுக்கு அடையாளமாக உடலில் “மை” தெளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1,050 தெருநாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாதவரம் மண்டலத்தில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடும்  பணி ஏழு நாட்களுக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் வெறிநாய்க்கடி நோயிலிருந்தும், அக, புற ஒட்டுண்ணி தாக்குதலில் இருந்தும், தெருநாய்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சி  ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: