ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதிய ஒப்பந்தம் அமைச்சர், வேதாந்தா நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமா?: அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதிய ஒப்பந்தம் போட்ட மத்திய அமைச்சர் மற்றும் வேதாந்தா நிறுவனம் மீது தமிழக அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்குமா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் கையொப்பமிட்டிருக்கிறது. இதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு தமிழக அரசு  எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் நேரிடையாக பதில் கூற தயாராக இல்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க ஆய்வு செய்ய, உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் தமிழக அரசிடம் அனுமதி  பெற வேண்டும் என்று கூறுகிறார்.

தமிழக அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் அமைச்சர். புதிதாக ஒப்பந்தம் போட்டிருக்கிற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர  பிரதான் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் எப்போது கிரிமினல் நடவடிக்கையை அமைச்சர் சண்முகம் எடுக்கப்போகிறார் என்பதை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  அத்தகைய நடவடிக்கை எடுக்கிற துணிவு அதிமுக அரசுக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். கடந்த 21 மாதங்களாக அதிமுக அரசு இரட்டை வேடம் போட்டதை போல ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் போட  வேண்டாம் என்று தமிழக ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: