நீட் தேர்வு விவகாரத்தை மறைத்த எடப்பாடியை கூண்டில் நிறுத்த வேண்டும்: வைகோ ஆவேசம்

சென்னை: நீட் மசோதா நிராகரிப்பை மறைத்த எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கூண்டில் நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கு ஒன்றில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது அந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதற்கு வைகோ மறுப்பு  தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி கருணாநிதி சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசியதாவது:பல்கலைகழகங்களில் உள்ள கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது என்று கல்லூரி முதல்வர்கள் ஆணை பிறப்பித்திருக்க கூடிய நிலையில், குரு பூர்ணிமாவை பார்ப்பதற்கு அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் உள்ள  ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு அனுப்பியுள்ளார்.2022-ல் சந்திரனுக்கு மனிதனை இறக்கப் போகிறோம் என்று கூறிவரும் நிலையில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய புராணங்களை, கதைகளை வைத்துக் கொண்டு பூர்ணசந்திரா, குரு பூர்ணிமா என்று கூறி மாணவர்கள் ஆசிரியர்களுடன்  சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முட்டாள்தனமான யோசனை.

பல்கலைக்கழக மானியக் குழு என்ன குப்பை தொட்டியா? கல்லூரி முதல்வர்களுக்கு இப்படி அறிவிப்பை அனுப்பியதின் நோக்கம் இந்தியை திணிப்பது மட்டுமல்ல.  கலாசாரத்தை சீரழித்து, அறிவியல் சிந்தனையை கூர் மழுங்க செய்வது  போன்றது. எனவே இதை செய்த ரமேஷ் பொக்கிரியால் ராஜினாமா செய்ய வேண்டும்.நீட் தேர்வு மசோதாவிற்கு தடை வாங்கி விடுவோம் என்று சொல்லி 6 பேரை சாகடித்தது எடப்பாடி பழனிச்சாமியின் அரசு. தமிழக அரசின் நீட் தடை மசோதாவை நிராகரித்ததாக மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடிதம்  அனுப்பியுள்ளது. ஆனால் இதனை இரண்டு வருடமாக எடப்பாடி பழனிச்சாமி அரசு மறுத்து வந்துள்ளது. இதை மறைத்து பெரிய மோசடி. இதைவிட பெரிய நம்பிக்கை துரோகம் எதுவுமில்லை. ஏழரை கோடி மக்களை ஏமாற்றி, 6 பேர் சாவிற்கு  காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லை. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, கூண்டில் நிறுத்த வேண்டும் என்றார்.

Related Stories: