அறிவியல்ரீதியாக ஆய்வு செய்யாமல் போராட்டம் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது: ஸ்டெர்லைட் சார்பில் ஐகோர்ட்டில் வாதம்

சென்னை: அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யாமல் மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.தமிழக அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் 6வது நாள் வாதம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில்  நடந்தது.வேதாந்தா நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணி ஆஜராகி வாதிட்டதாவது:ஸ்டெர்லைட் ஆலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்த மாசுக்கட்டுப்பாடு அளவிலேயே இயக்கப்பட்டு வந்தது. அதனால் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால், திடீரென கடந்த ஆண்டு ஏப்ரல்  12ம் தேதி அனுமதிக்கப்பட் அளவை விட அதிகமாக இயக்கியதாக கூறி ஆலையை மூட உத்தரவிட்டப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த ஆய்வும் நடத்தாமல் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ஆலையை மூட தமிழக அரசு  உத்தரவிட்டது சட்டத்திற்கு விரோதமானது என்றார்.அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், ஆலையை இயக்க சுற்றுச்சூழல் மற்றும் தீயணைப்பு துறையின் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

Advertising
Advertising

அதற்கு மூத்த வக்கீல் மாசிலாமணி, சுற்றுச்சூழல் மற்றும் தீயணைப்பு துறையின் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால் அதை மாநில அரசு கருத்தில் கொள்ளவில்லை. நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என்றால் முதலில் நோட்டீஸ் வழங்க  வேண்டும். ஆனால் எந்த நோட்டீசும் அரசால் இதுவரை வழங்கப்பட்டவில்லை. தமிழகத்தில் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கிய, பொருளாதார வளர்ச்சி, வர்த்தகத்தையும் பெருக்கிய ஒரு நிறுவனம் அடிப்படை காரணம் இல்லாமல்  மூடப்பட்டுள்ளது.ஆலையை மூடும் உத்தரவை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்கவில்லை, அவசரகதியில் முடிவு எடுத்து அறிவித்துள்ளது. அறிவியல்ரீதியாக ஆய்வு அறிக்கையும் இல்லாதபோது மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்ற ஒற்றை  காரணத்திற்காக மட்டுமே ஆலை மூடப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக ஆலைகள் மூட உத்தரவிடப்பட்டால்,  தமிழகத்தில் உள்ள எல்லா ஆலைகளையும் போராட்டம் காரணமாக மூட வேண்டிய நிலை ஏற்படும்.நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. எந்த இடத்திலும் மாசு ஏற்பட்டதாகவோ, பாதிப்பு ஏற்பட்டதாகவோ குறிப்பிடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை கிராமத்தின் முக்கிய பகுதியில் அமைக்கப்படவில்லை. அதற்கான அனுமதிக்கப்பட்ட தொழில் பேட்டையில் மட்டுமே அமைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி அதே தொழிற்பேட்டையில் ஏராளமான  தொழிற்சாலைகள் இயங்கி வரும்போது எங்களால் மட்டும் மாசு ஏற்பட்டதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும். இவ்வாறு அவர் வாதிட்டார். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories: