கிரெடிட், டெபிட் கார்டில் மின் கட்டணம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: தமிழக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை

சென்னை: கிரெடிட், டெபிட்கார்டு பயன்படுத்தி மின் கட்டணத்தை செலுத்தும் வசதி உள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடத்தில் வாரியம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும் வீடு, விவசாயம், தொழிற்சாலை என பல்வேறு வகையான மின் இணைப்புகள் உள்ளன. இதற்கு தேவையான மின்சாரத்தை வாரியம் விநியோகித்து வருகிறது. நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான  கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக மின் கட்டண வசூல் மையங்களுக்கு விற்பனை நிலைய கருவி (பி.ஏ.எஸ்.) வழங்கப்பட்டுள்ளது. மின்வாரிய பிரிவு  அலுவலகங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாரியத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) அல்லது பற்று அட்டை (டெபிட்கார்டு) பயன்படுத்தியே மின் கட்டணத்தை செலுத்த முடியும். இதற்கு பல லட்சம் ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும்,  பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ரொக்கமாகவே கட்டணம் செலுத்தி வருகின்றனர். எனவே இத்திட்டம் குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தொமுச நிர்வாகி அ.சரவணன் கூறுகையில், ‘‘மின்வாரியத்தில் கட்டண வசூலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க, டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என  மின்வாரியங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மின் கட்டணம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் செலுத்துவதை ஊக்குவிக்க பிரத்யேக மையங்களை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும்,  மின்நுகர்வோரில் பெரும்பாலானோர் ரொக்கமாகவே தங்கள் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த முறையே அதிக அளவில் நடைமுறையில் உள்ளது. மின்னணு வசதி மூலம் கட்டணம் செலுத்தும் முறை  அவர்களுக்கு தெரியாததும் இதற்கு முக்கிய காரணம். பொது மக்கள் மத்தியில் பேதுமான இச்சேவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை.மின் கட்டணம் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் செலுத்த பயனாளிகளை மின்சார வாரியங்கள் ஊக்குவிக்க வேண்டும். “பாயிண்ட் ஆஃப் சேல்’’ கருவி மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் மூலம் இத்தகையக்  கட்டணங்களை செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

தாமதம் இருக்காது

நுகர்வோர்களில் பெரும்பாலோனர் ரொக்கமாகவே வாரியத்திற்கு கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தும் போது, வாரியத்திற்கு உடனடியாக பணம் சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே மின்னணு  முறையிலான திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பட்சத்தில், நுகர்வோர்கள் செலுத்தும் பணம் உடனடியாக தாமதமில்லாமல் வாரியத்தை வந்து சேரும் என  தொழிற்சங்கத்தினர் நம்புகின்றனர்.

Related Stories:

>