சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காத டிஆர்ஓ, தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத திருவள்ளூர் டிஆர்ஓ மற்றும் பூந்தமல்லி தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று விளக்கமளிக்குமாறு திருவள்ளுர் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் பணவீடுதோட்டம் பஞ்சாயத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:பூந்தமல்லி தாலுகாவில் உள்ள பிடறிதாங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளை தோண்டி நிலத்தடி நீரை விதிமுறைகளுக்கு முரணாக குமரேசன் என்பவர் உள்பட 4 பேர் உறிஞ்சி  வருகிறார்கள். சட்டவிரோதமாக எடுக்கப்படும் இந்த தண்ணீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால், அந்த கிராமம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர், பிடறிதாங்கல் கிராம நிர்வாக அதிகாரி, பணவீடுதோட்டம் பஞ்சாயத்து யூனியன் அதிகாரி உள்ளிட்டோரிடம் கடந்த ஜூன் 12ம் தேதி மனு கொடுத்தேன். எனது மனு மீது  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், திருவள்ளூர்  டிஆர்ஓ, பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் சம்மந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து ஜூலை 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் நீதிபதிகளிடம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த ஆய்வு பணிகளும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத டிஆர்ஓ மற்றும் பூந்தமல்லி தாசில்தார் மீது ஏன் கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீரைக்கொண்டு  செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த சட்ட நடைமுறைகளை டிஆர்ஓ மற்றும் தாசில்தார் மேற்கொள்ளவில்லை.  எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத திருவள்ளூர் டிஆர்ஓ மற்றும் பூந்தமல்லி   தாசில்தார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருவள்ளூர் கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி

தண்ணீரைக்கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்க வேண்டும். இந்த சட்ட நடைமுறைகளை டிஆர்ஓ மற்றும் தாசில்தார் மேற்கொள்ளவில்லை.

Related Stories: