மத்திய அரசு அனைத்து பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது: தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட அஞ்சல்துறை ஊழியர்கள் தேர்வுக்கான  எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது திமுக உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு எழுப்பிய உரிமைக்கான வெற்றியாகும்.  இப்படி கட்சிகளை கடந்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தமிழகத்து அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் நிலை நாட்டிட முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த அஞ்சல்துறை  தேர்வு ரத்து. மத்திய பாஜ அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை அடைந்திடும் நோக்கில் மாநில மொழிகளில் எழுதப்பட்டு வந்த தேர்வு முறையை பின்பற்றாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துத் தேர்வுகளை நடத்தின.

இந்தப் பிரச்னையில் அரசியலைக் கடந்து அதிமுக உறுப்பினர்களும் திமுகவோடு கைகோர்த்தனர். இந்நிலையில்தான், மத்திய தொலைதொடர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு அனைத்து  பிரச்னைகளிலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிறது. காவிரி நதிநீர் பிரச்னை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், வறட்சி நிவாரணத்திற்கு நிதி வழங்குதல், வெள்ள நிவாரணத்திற்கு நிதி ஒதுக்குதல் போன்ற  தமிழகத்தை பாதிக்கக் கூடிய பல்வேறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி உறுதி என்பது  தெளிவாகிறது.எனவே தமிழ்நாட்டின்  நலன் என்ற ஒற்றை குறிக்கோளில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திட முன்வந்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: