25 பேர் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களா?: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவு

சென்னை: துணை ஆணையராக பதவி உயர்வு பட்டியலில் உள்ள 25 பேரில் இணை ஆணையரால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி மண்டல  இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையில் 40,190 கோயில்கள் உள்ளன. இந்த கோயில் வருமானத்தின் அடிப்படையில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர்களால் நிர்வாக பணிகள் கவனிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 16 துணை ஆணையர்கள் பணியிடங்கள் உள்ளது. இதில், 4 துணை ஆணையர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில், பெரும்பாலான கோயில்களில் உதவி ஆணையர் நிலையிலான  அதிகாரிகள் துணை ஆணையர் கோயில்களில் நிர்வாக பணிகளை கவனித்து வருகின்றனர். இது சட்ட விரோதம் என்றால் அறநிலையத்துறையில் காலி பணியிடங்கள் இருப்பதால் வேறுவழியின்றி உதவி ஆணையர்களை நியமித்துள்ளனர்.  இந்த நிலையில் துணை ஆணையர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியான உதவி ஆணையர் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் பதவி உயர்வு  பட்டியல் தயார் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் தற்போது பதவி உயர்வுக்கு தேர்ந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, தஞ்சாவூர் நகை சரிபார்ப்பு உதவி ஆணையர்  வில்வமூர்த்தி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகா தேவி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உதவி ஆணையர் ஜே.முல்லை, கோவை உதவி ஆணையர் கார்த்திக், சிவன்மலை உதவி ஆணையர் எம்.கண்ணதாசன், சோளிங்கர்  நரசிம்மசுவாமி கோயில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், சென்னை உதவி ஆணையர் கவெனிதா, தஞ்சாவூர் உதவி ஆணையர் சிவராம்குமார், தலைமையிட சட்ட சேர்மம் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, திருத்தணி சுப்பிரமணியசுவாமி  கோயில் உதவி ஆணையர் உட்பட 22 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த உதவி ஆணையர்களுக்கு நாளது வரை இணை ஆணையர்களால் எழுதப்பட்ட மந்தன அறிக்கைகளையும் பணிபதிவேட்டு உடன் அனுப்ப கேட்டு  கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வாய்ப்பில்லை என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: