ஒடிசா வாலிபர் கொலையில் நண்பர் கைது

ஆலந்தூர்: கிண்டி பாரதி நகரில் ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத் (30), ரபி மோஜி (45), சந்தோஷ் (44), ஜஸ்வந்த் (36) ஆகியோர் தங்கி  செக்யூரிட்டி வேலை செய்து வந்தனர். கடந்த 2 தினங்களாக ஜெகநாத் ராவத் வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அறையில் ஜஸ்வந்த் இல்லாததால் செல்போனில் அழைத்து கேட்டதற்கு தனக்கு தெரியாது என கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், ஜெகநாத் ராவத்தை  அடித்து தாக்கியதில் எலும்புகள் உடைந்து இறந்தது தெரிந்தது.இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜஸ்வந்த்தை தேடி வந்தனர். இந்நிலையில் விசாகப்பட்டினம் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஜஸ்வந்த்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.விசாரணையில் ஜஸ்வந்த் கூறியதாவது: ஜெகன்நாத் ராவத் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்ததால் முதுகில் ஏறி மிதித்துவிட்டு சென்றுவிட்டேன். நான் மிதித்ததில் ஜெகநாத் ராவத் இறந்ததை அறிந்த நான் போலீசாருக்கு பயந்து சுற்றி திரிந்தேன். பின்னர் சொந்த ஊருக்கே சென்று தப்பிவிடலாம் என  முடிவு செய்து விமான நிலையம் வந்தேன். இவ்வாறு கூறியதையடுத்து ஜஸ்வந்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* திருவண்ணாமலையை சேர்ந்த தேவி (35) சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை  செல்ல கோயம்பேடு வந்தார். பின்னர் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றபோது ₹12 ஆயிரத்துடன் மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. புகாரின்பேரில் கோயம்பேடு எஸ்.ஐ ஜான்கென்னடி சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மல்லிகா என்ற துப்புரவு ஊழியர் குப்பையுடன் மணிபர்சும் அள்ளப்படுவது தெரிந்தது. இதையடுத்து குப்பைகளை கொட்டிய இடத்துக்கு சென்று தேடியபோது பணத்துடன் மணிபர்ஸ் கிடைத்தது. அதை தேவியிடம் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஒப்படைத்தார்.

* செங்குன்றம் எம்.ஏ.நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்த பிரபு என்பவரது மனைவி லதா (38) அம்பத்தூர் அடுத்த புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்று   காலை லதா கணவருடன் பைக்கில் பள்ளிக்கு சென்றபோது  பின்னால் வந்த மினி லாரி மோதியதில் பைக் நிலைதடுமாறி விழுந்தது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய லதா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன் (38) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

* சூளை ஏ.பி.சாலையை சேர்ந்தவர் சபீலா ராஜா (28). டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். கடந்த பிப்ரவரி 13ம் தேதி கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கிஷோர் குமார் (23) வாடகைக்கு காரை எடுத்து சென்றார். மறுநாள் கிஷோர் குமார் கரை திரும்ப விடவில்லை. இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் சபீலா ராஜா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோர் குமாரை பிடித்தனர். விசாரணையில் வாடகைக்கு எடுத்த காரின் நம்பரை மாற்றி கொளத்தூர் பாலகுமாரநகரை சேர்ந்த ஜான் (45) உதவியுடன் நெற்குன்றம் தனலட்சுமி ஈவெரா தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (31) என்பவரிடம் ₹2 லட்சத்திற்கு அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளனர். பின்னர் அந்த பணத்தை வைத்து இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் கிஷோர் குமார், அவரது நண்பர் ஜான் மற்றும் அடமானம் வாங்கிய சத்தியமூர்த்தி ஆகிய 3 பேர் மீது மோசடி மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

* வடபழனி தயான் நகர் 2வது தெருவை சேர்ந்த சுப்புராஜ் (62) நேற்று முன்தினம் நெற்குன்றம் சாலையில் உள்ள ஏடிஎம் டெபாசிட் இயந்திரத்தில் தனது வங்கி கணக்கிற்கு ₹5 ஆயிரம் பணம் செலுத்த முயன்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென முதியவருக்கு உதவி செய்வது போல் நடித்து போலி ஏடிஎம் கார்டு கொடுத்துவிட்டு ₹20 ஆயிரம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: