அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபரை கடத்திய இரண்டு பேர் கைது

அண்ணா நகர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ₹1.5 கோடி மோசடி செய்த வாலிபரை காருடன் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் அந்த வாலிபரால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.  சென்னை மீஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (28). இவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் 1.5 கோடி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் கொடுத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ந்நிலையில் கடந்த 9ம் தேதி கார்த்திகேயன் தனது அக்கா ஷாலினி (30) என்பவரை சென்னை ஸ்கைவாக் பகுதி சாலையில் இறக்கிவிட்டு, காரில் சைதாப்பேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை.

இதுகுறித்து ஷாலினி கடந்த 11ம் தேதி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர், ஷாலினி அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரனிடம் நடந்ததை கூறினார். இதையடுத்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை அண்ணா நகர் பகுதியில் கார்த்திகேயனை இறக்கிவிட வந்த ஒரு காரை அமைந்தகரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் கார்த்திகேயனை கடத்தியது பண மோசடியால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் கோபி (36), கண்ணன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: