ரூ.345 கோடியில் கடற்படைக்கு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம்

ஜெருசலம்: இஸ்ரேலிடம் இருந்து கடற்படைக்கு நடுத்தர ஏவுகணைகளை வாங்குவதற்காக ரூ.345  கோடியில் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. தரையில் இருந்து புறப்பட்டு வானில் எதிரி ஏவுகணைகள், விமானங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நடுத்தர ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஏவுகணைகள், கடற்படையில் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம், கடந்த புதன்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இதன்படி, ₹345 கோடி மதிப்பிலான ஏவுகணைகளை இந்தியாவுக்கு இஸ்‌ரேல் வழங்க உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான, இஸ்‌ரேல் வான்வெளி தொழிற்துறை (ஐஏஐ) வெளியிட்ட அறிக்கையில், கடந்த  வாரம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய கடற்படைக்கு நடுத்தர பாதுகாப்பு ஏவுகணைகள், அதற்கான உபகரணங்கள், தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை இஸ்ரேல்  வழங்க இருக்கிறது’  என்று கூறப்பட்டுள்ளது.  ஐஏஐ பொது மேலாளரும், நிர்வாக துணைத்  தலைவருமான போஸ் லெவி கூறுகையில், இந்த ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்துக்கு  ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன் மூலம், பாதுகாப்பு கருவிகளை  வழங்குவதோடு அல்லாமல், அதன் பிறகு அதற்கான சேவைகளையும் வழங்க இஸ்‌ரேலுக்கு  வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய கடற்படை உடனான அனைத்து நடவடிக்கைகளிலும்  இஸ்‌ரேலின் பங்களிப்பு, வலுவான நட்புறவு பிரதிபலிக்கிறது. அண்மையில்தான்,  இந்தியாவில் உள்ள பங்குதாரர் தொழில் நிறுவனங்களின் திருப்திக்கு உட்பட்டு,  மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பன்னோக்கு பாதுகாப்பு கருவிகளின்  சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது,’’ என்றார்.

Related Stories: