×

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி ஜாதவின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திஹாக்: ‘இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, பாகிஸ்தான் கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ். கடந்த 2017ம் ஆண்டு இவர் ஈரான் சென்றார். அவரை சிலர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு இவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுக்காக தனது நாட்டில் இவர் உளவு பார்த்தாகவும், தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாகவும் இவர் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யாதவை தூக்கில் போட பாகிஸ்தான் அரசு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அவரை உடனடியாக விடுவிக்கும்படி வலியுறுத்தின. ஆனால், அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டு, யாதவை தூக்கில் போட பாகிஸ்தான் நேரம் நிர்ணயித்தது.இதையடுத்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதில், வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. உளவு பார்த்தவருக்கும், தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டவருக்கும் தூதரக உதவிகள் கிடைப்பது பற்றி வியன்னா ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்படவில்லை என பாகிஸ்தான் கூறியது. இதைத் தொடர்ந்து, குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.  

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் குவாவி அகமது யூசப்  தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு கேட்டது. அதன்பின் இதன் மீதான தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 5 மாத இடைவெளிக்குப்பின் இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை வாசித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யூசப், ‘‘குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பாகிஸ்தான் கட்டாயம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவரை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இந்திய விமானப்படை பைலட் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்தது போல், குல்பூஷன் ஜாதவையும் பாகிஸ்தான் விரைவில் விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Indian Navy's,death sentence , International Court of Action
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...