சந்திராயன்-2 விண்கலம் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது: விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 21 அல்லது 22ம் தேதி விண்ணில் செலுத்த ஆலோசித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவை  ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு, அக்டோபர்  22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கிய  விண்கலம் 312 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம், நிலவில்   தண்ணீர், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் உள்ளிட்ட தாதுகள் இருப்பது  தெரியவந்தது. இதையடுத்து நிலவின் தென்துருவத்தில் ஆய்வு  மேற்கொள்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை  நிலவிற்கு அனுப்ப இஸ்ரோ  திட்டமிட்டது. அதன்படி கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர  மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டது. அப்போது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் எரி பொருட்கள்  நிரப்பும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விண்கலம் விண்ணில்  ஏவுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.

Advertising
Advertising

இதையடுத்து,  தற்காலிகமாக விண்கலம் விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது. ராக்கெட்டில்  ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது சிறிய அளவிளான கோளாறு என்றும்,  ஓரிரு வாரத்தில் சரி செய்யப்பட்டு மீண்டும் விண்ணுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘‘சந்திராயன்-2 விண்கலம் திங்கட்கிழமை உறுதியாக விண்ணில் ஏவப்படும்’’ என நம்பிக்கை தெரிவித்தார். விண்வெளி  ஆராய்ச்சி குழுவினர் கூறுகையில், ‘‘வரும் 21 அல்லது 22ம் தேதி சந்திராயன்-2  விண்ணில் செலுத்த  தயாராகி வருகிறது. மேலும் நிலவிற்கு சென்று ஆய்வு  மேற்கொள்வதற்கு தேவையான அளவு எரி பொருட்கள் ராக்கெட்டில் நிரப்பப்படும். ஞாயிற்றுக்கிழமை கவுன்ட் டவுன் தொடங்கி திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்படும்’’ எனக் கூறினர்.

Related Stories: