திருமண புகைப்படத்தை வெளியிட்டு சேலை டிவிட்டர் பதிவில் இணைந்தார் பிரியங்கா

புதுடெல்லி:  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சேலை டிவிட்டர் பதிவில் இணைந்ததோடு, 22 ஆண்டுகளுக்கு முன் எடுத்த திருமண புகைப் படத்தையும் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் டிரெண்டாகி வருவது வாடிக்கை. தற்போது, ‘சேலை டிவிட்டர்’ எனப்படும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் இணையும் பெண்கள், தங்களுக்கு விருப்பமான சேலையை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதில் இணைந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 22 ஆண்டுகளுக்கு முன் தனது திருமணத்தின்போது சேலை அணிந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான பனாரஸ் சேலை அணிந்துள்ளார். அதனுடன், ‘திருமணத்தன்று காலை நடந்த பூஜையில் பங்கேற்றபோது எடுத்த படம்,’ என்ற  தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து அவருக்கு பலர் திருமண நாள் வாழ்த்து கூறி பதிவிட்டனர். இதற்கு பதில் டிவிட் செய்த பிரியங்கா, ‘உங்கள் அனைவரின்  வாழ்த்துகளுக்கும் நன்றி. ஆனால், இந்த படத்தை சேலை டிவிட்டர் பதிவிற்காக தான் போஸ்ட் செய்தேன். எனது திருமண நாள் பிப்ரவரியில் வரும்,’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை நக்மா, சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பாஜ.வை நூர் சர்மா உள்ளிட்ட பெண் அரசியல்வாதிகளும் இதில் இணைந்து, சேலையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.


× RELATED உழைப்புக்கு என்றுமே ‘ஓய்வு கிடையாது’...