மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் திடீர் கைது: பாக். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

லாகூர்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 166 பேர் பலியாகினர். இத்தாக்குதலுக்கு, ‘லஷ்கர் இ தொய்பா’ தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டவர் தீவிரவாதி ஹபீஸ் சயீத்.இவர், ஜமா உத் தவா அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்புதான், லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதியுதவி அளித்து வருவதாக நம்பப்படுகிறது. கடந்த 2012ல் லஷ்கர் இ தொய்பா அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்த அமெரிக்கா, ஹபீஸ் சயீத்தையும் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து அவரது தலைக்கு ரூ.10 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்தது. ஆனாலும், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தார்.

இதற்கிடையே, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்பவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுப்பதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. இதனால், ஜமா உத் தவா அமைப்பை தடை செய்த பாகிஸ்தான் அரசு, ஹபீஸ் சயீத் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது. இதில், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்காக ஜமா உத் தவா மற்றும் அதன் அறக்கட்டளையான பலாஹ் இ இன்சானியத் ஆகியவை தங்களின் பிற அறக்கட்டளைகள் மூலமாக நிதி திரட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து,  ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது  23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜமா உத் தவா மற்றும் அதன் அறக்கட்டளை சொத்துக்களை பாகிஸ்தான் அரசு முடக்கியது. லாகூர் மற்றும் முரிட்கேவில் உள்ள ஜமா உத் தவாவின் தலைமையகத்துக்குள் நுழைய ஹபீஸ் சயீத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதவிர, பொது மேடையில் இளைஞர்களுக்கு மூளை சலவை செய்யும் வகையில் பேசுவது மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி சேகரிப்பது தொடர்பாக ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மாக்கி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை, பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா செல்லும் வழியில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து, ஹபீஸ் சயீத்தை லாகூரில் உள்ள பாதுகாப்பு நிறைந்த கோட் லாக்பத் சிறையில் போலீசார் அடைத்தனர். இச்சிறையில் தான், ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டுள்ளார். ஹபீஸ் சயீத்தின் திடீர் கைது விவகாரம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்ரான்கானின் நாடகம்

ஹபீஸ் சயீத்தின் இந்த திடீர் கைதுக்கு காரணம், விரைவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொள்ள உள்ள அமெரிக்க பயணம்தான் என கூறப்படுகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்து வந்தது. ஆனாலும், இந்த நிதியை பாகிஸ்தான் அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்ற கருத்து நிலவியதால், கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு அளிக்கும் ரூ.2,000 கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தியது. இந்த நிதியை மீண்டும் பெறுவதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் முறையாக வரும் 21ம் தேதி அமெரிக்கா சென்று, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். அதற்கு முன்பாக, தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருவது போன்ற தோற்றத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தவே, இந்த கைது படலம் நடந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: