மணிஷ் 100, கில் 77 ரன் விளாசல் தொடரை வென்றது இந்தியா ஏ அணி

நார்த் சவுண்டு: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், 148 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. மணிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டியிலும் வென்ற இந்தியா அணி 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி நார்த் சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் (ஆன்டிகுவா) நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. கேப்டன் மணிஷ் பாண்டே அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் சரியாக 100 ரன் (87 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் ஷுப்மான் கில் 77 ரன் (81 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஷ்ரேயாஸ் அய்யர் 47 ரன், ஹனுமா விஹாரி 29, இஷான் கிஷண் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அன்மோல்பிரீத் சிங் டக் அவுட்டானார். குருணல் பாண்டியா 2 ரன், வாஷிங்டன் சுந்தர் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ பந்துவீச்சில் ஷெப்பர்டு, கார்ன்வால் தலா 2, கீமோ பால், ரேமன் ரீபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 296 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கேம்ப்பெல் 21, சுனில் அம்ப்ரிஸ் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரீபர் 19, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 15 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

10வது வீரராகக் களமிறங்கிய கீமோ பால் அதிரடியாக 34 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 34.2 ஓவரிலேயே 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அகீம் ஜார்டன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ பந்துவீச்சில் குருணல் பாண்டியா 7 ஓவரில் 25 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். விஹாரி 2, ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சாய்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.148 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. மணிஷ் பாண்டே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டி கூலிட்ஜ் மைதானத்தில் 19, 21 தேதிகளில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.

Related Stories: