இரணியல் அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி: எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

நாகர்கோவில்: இரணியல் அருகே தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. அதிர்ஷ்டவசமாக ஏரநாடு எக்ஸ்பிரஸ் தப்பியது. நாகர்கோவில் - மங்களூர் இடையே எரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் நள்ளிரவு 11.45 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்துக்கு வந்து, பின்னர் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு செல்லும். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு எரநாடு எக்ஸ்பிரஸ் இரவு 11.20 மணியளவில் பள்ளியாடி அருகே வந்து கொண்டிருந்தது. பள்ளியாடி -இரணியல் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது கண்டன்விளை என்ற இடத்தில் ரயிலில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. உடனடியாக இன்ஜின் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார். பின்னர் சம்பவ இடத்தில் பார்த்தபோது கம்பி,  தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற சதி செயலுக்கு திட்டமிட்டு, மர்மநபர்கள் இந்த கம்பியை வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படையினர்,  ரயில்வே போலீசார், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அந்த பகுதியில் தண்டவாளத்தையொட்டி, குறுகிய சாலை செல்கிறது. இந்த வழியாக சிலர் பைக், ஆட்டோக்களில் தண்டவாளத்தை கடக்கிறார்கள். இதை தடுக்க அந்தசாலையை மறித்து தண்டவாள கம்பிகள்நடப்பட்டு இருந்தன. அந்த கம்பியை பிடுங்கி, தண்டவாளத்தில் வைத்திருக்கிறார்கள்.  கம்பியை ரயிலின் முன்பக்கம் உள்ள பிளேட், தூக்கி வெளியே வீசியதால் ரயில் தப்பியது. இல்லையென்றால் மிகப்பெரிய அசம்பாவிதசம்பவம் நிகழ்ந்து இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர். இதுபற்றி  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: