மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றச்சாட்டு சென்னை ரயில் நிலையங்களில் போதிய கழிவறைகள் இல்லை

புதுடெல்லி: ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிவறை கட்டித் தருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், சென்னை ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதி இல்லையே’’ என திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசினார்.மக்களவையில் நேற்றைய விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிவறை கட்டியுள்ளதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை தினந்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அங்கு போதிய கழிவறை வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். மகாத்மா காந்திக்குப் பிறகு எந்த தலைவரும் சுத்தம், சுகாதாரத்தை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை,’’ என கூறினார்.

Advertising
Advertising

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி பேசுகையில், ‘‘பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தமிழ் மக்கள் மீது இந்தியை திணிக்க 3 முறை முயற்சித்துள்ளது. பல்வேறு போராட்டங்கள் மூலமாக, இந்தியை திணிக்கும் பாஜ.வின் முயற்சியை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். நாங்கள் திராவிடர்கள். கடந்த 1930ம் ஆண்டிலிருந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராடி வருகிறோம். தமிழ் மக்களின் மொழிப்பெருமையை திமுக தொடர்ந்து பாதுகாக்கும்,’’ என்றார். இதற்கு அவையில் இருந்த திமுகவின் மற்ற எம்பிக்களான டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதைக்கேட்ட பாஜ எம்பிக்கள் சிலர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி எழுந்து, ‘‘இந்தி, இந்தியாவின் முக்கிய மொழியாக உள்ளது. இந்திக்கு எதிராக திமுக எம்பி எப்படி பேசலாம்?’’ என்றார். இதன் காரணமாக சிறிது நேரம் அவையில் பரபரப்பு நிலவியது. பின்னர், மத்திய அரசு பணிகளில் இடஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘மத்திய அரசு பணியில் இடஒதுக்கீட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட அதிகமான எஸ்சி, எஸ்டி பிரிவினர் பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: