உள்ளாட்சி தேர்தல் தாமதம் இல்லாமல் நடத்தப்படுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் காலதாமதம் இல்லாமல் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா ஒரு கேள்வியை எழுப்பி, அது சம்பந்தமாக மத்திய பஞ்சாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஒரு பதிலை தந்திருக்கின்றார்கள். அதாவது உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் 2016-17ம் நிதியாண்டில் இருந்து செயலாக்க மானியத்தை தமிழகத்திற்கு வழங்கவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கின்றார். புதிய உள்ளாட்சி அமைப்புகள் 24-10-2016 அன்று தேர்தல் நடைபெற்று தேர்வு செய்திருக்க வேண்டும். அரசியல் சட்டப்பிரிவு 243Eல் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 5 வருடம் என்றும், அந்த பதவிக்காலம் முடிவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் முடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக அந்த விதியில், சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தினால் உள்ளாட்சிப் பகுதியில் இருக்கும் அடிப்படை பிரச்னைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அதனால் தான், 2016-17ம் ஆண்டு முதல் செயலாக்க நிதியும் விடுவிக்கப்படவில்லை என்று மத்தியில் இருக்கக்கூடிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார். எனவே இப்பொழுதும் நான் கேட்டுக்கொள்கின்றேன் இனியும் தாமதம் செய்யாமல் இந்த உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு இந்த அரசு முன் வருமா என்று நான் கேட்கின்றேன். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி: உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன் என்று உங்களை கேட்டால் வழக்கு நிலுவையில் இருப்பதாக சொல்கிறீர்கள். 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக தேர்தலை தள்ளி வைப்பதால் மத்திய அரசின் நிதி பல ஆயிரம் கோடி தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி வேலுமணி: 22 ஆண்டுகளுக்கு பிறகு 1 லட்சத்து 19 ஆயிரத்து 222 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். கடந்த 2016 முதல் மத்திய அரசிடம் இருந்து அடிப்படை மற்றும் செயலாக்க மானியம் 12 ஆயிரத்து 312 கோடி தர வேண்டும். அதில், ₹8,537 கோடி மானியம் பெறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ம் தேதி மத்திய அமைச்சரை சந்தித்து மீதம் தர வேண்டிய நிதியை விடுவிக்கக்கோரி கேட்டுள்ளோம். அதற்காக தீவிர முயற்சி எடுக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணிகள் நடைபெறுகிறது. பணிகள் நடக்கவில்லை என்பது கூறுவது தவறு. மத்திய அரசு தர வேண்டிய மீதி நிதியை பெற்றும் மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.

Related Stories: