வாகனஓட்டிகள் மீது மனிதக்கழிவு விழுவதாக வழக்கு மக்கள் கோரிக்கை மீது ரயில்வே நடவடிக்கை என்ன?: கலெக்டருக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.எஸ்.சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஐகோர்ட்டில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி முன்பாக ரெயில்வே சுரங்கப்பாதை  உள்ளது. இப்பாதை வழியாகத்தான் ஐகோர்ட்டு நீதிபதிகள், சென்னை கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கார்களில் செல்கின்றனர். சுங்கப்பாதைக்கு மேலே ரெயில்கள் செல்லும் போது சுரங்கப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது  ரயிலில் இருந்து  மனிதக்கழிவுகள் விழுகின்றன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்  பிரசாத் ஆகியோர்  முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல்  ராம்குமார், ‘இந்த வழித்தடத்தில் மனிதக்கழிவுகள் மேல் இருந்து கீழே விழாத வகையில் பாலத்தை சீரமைக்க கடந்த  2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே  டெண்டர் விடப்பட்டது. அதன்படி 4 மாதத்தில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்பணியை தொடங்க ஏதுவாக போக்குவரத்தை சீரமைத்து தரக்கோரி போக்குவரத்து உதவி கமிஷனர் மற்றும்  மாவட்ட கலெக்டருக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை’ என தெரிவித்தார்.இதை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை மாவட்ட கலெக்டர், போக்குவரத்து உதவி கமிஷனர் ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: