வேலூர் மக்களவை தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரி, எஸ்பியுடன் திடீர் ஆலோசனை: தலைமைத் தேர்தல் அதிகாரி நடத்தினார்

சென்னை: வேலூர் மக்களைவை தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரி, எஸ்பியுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.வேலூர் மக்களவை தொகுதியில் திடீரென தேர்தல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து,  அங்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. 9ம் தேதி வாக்கு  எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி மத்திய அரசு முன்னாள் அதிகாரி பி.முரளிகுமாரை சிறப்பு செலவினப் பார்வையாளராக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு அங்கு தேர்தல் நடத்தப்படுவதை கண்காணிப்பதுடன், பண  பலத்தை கட்டுப்படுத்தி தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டம் நேற்று மாலை  4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடந்தது.வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி, எஸ்பி ஆகியோருடன் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். டிஜிபி திரிபாதி, சிறப்பு செலவினப் பார்வையாளர் முரளிகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு, பணப்பட்டுவாடாவை தடுப்பு தொடர்பாக வியூகம் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: