மாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளுக்கு தமிழகஅரசு எதிர்ப்பா, ஆதரவா?: முத்தரசன் கேள்வி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் நடவடிக்கைகளை, மாநில மக்கள் நலன் கருதி துணிவோடு எதிர்க்க வேண்டிய மாநில அரசு “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்ற முறையில் இரட்டை வேடம் போடுவது ஏன் என கேள்வி எழுகிறது.  நீட் தேர்வில்  இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு கோரி பேரவை நிறைவேற்றிய இரு மசோதாக்கள் குறித்து, முதல்வரும், பிற அமைச்சர்களும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம், விலக்கு கிடைக்குமென உறுதியாக தெரிவித்தார்கள்.

ஆனால் மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதமே, பேரவை மசோதாக்களை நிராகரித்து விட்டோம் என கூறுகிறது.திரைப்பட கலைஞர் சூர்யா கல்வி கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்பதற்காக, அமைச்சர்கள், பாஜ தலைவர்களும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சூர்யாவை அர்ச்சனை செய்கின்றனர். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு  வரும் மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமைகள், நலன்கள் அனைத்தும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில் மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இத்தகைய இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு  முற்றிலுமாக கைவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: