எம்பிபிஎஸ் இறுதியாண்டில் தேசிய அளவில் பொதுத்தேர்வு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: எம்பிபிஎஸ் படிப்புக்கு இறுதியாண்டில் தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் டாக்டராக பணியாற்றுவதற்கான உரிமம்  பெறுவதற்கான தேர்வாகவும், முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான தகுதித் தேர்வாகவும் இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரைவ கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம்:

* இந்திய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்புக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

* மருத்துவ பட்டப்படிப்பு கல்விக்குழு, மருத்துவ பட்டமேற்படிப்பு கல்விக்குழு, மருத்துவ மதிப்பீடு- தர நிர்ணய குழு, மருத்துவ நன்னெறி மற்றும் பதிவு குழு என 4 தன்னாட்சி அமைப்புகளை கொண்டதாக இந்த மருத்துவ ஆணையம்   இருக்கும்.

* மருத்துவ ஆணையமும், அதைச் சார்ந்த 4 குழுக்களும் நிலையான மற்றும் நவீன மருத்துவ கல்விக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தும்.

* மருத்துவ தன்னாட்சி குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 3ல் இருந்து 5 ஆக உயர்த்தப்படும். இதில், 3 பேர் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். மற்றொருவர் அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவராகவும், மேலும் ஒருவர் மாநில  மருத்துவ கவுன்சிலால் தேர்வு செய்யப்பட்ட டாக்டராகவும் இருப்பார்.

* மருத்துவ மதிப்பீடு மற்றும் தர நிர்ணய குழு, புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கும். இது தவிர, மருத்துவ மேற்படிப்பு தொடங்க அனுமதிப்பதுடன், கூடுதல் இடங்களை ஒதுக்கீடும் செய்யும்.

* எம்பிபிஎஸ் படிப்புக்கு இறுதியாண்டில் தேசிய அளவில் ‘நெக்ஸ்ட்’ என அழைக்கப்படும் ‘தேசிய வெளியேறும் பொதுத்தேர்வு’ நடத்தப்படும். இந்த தேர்வை எழுதினால்தான் அவர்கள் மருத்துவர்களுக்கான உரிமம் பெறமுடியும். இந்த தேர்வு  வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கான தகுதி தேர்வாகவும், எம்டி போன்ற முதுநிலை மருத்துவ படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் இது இருக்கும்.

* தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கப்படும் 50 சதவீத மருத்துவ இடங்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை மருத்துவ ஆணையம் ஒழுங்குபடுத்தும்.

* 15வது நிதிக்குழுவின் காலத்தை இந்தாண்டு நவம்பர் 30ம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

* நொடித்து போதல் மற்றும் திவால் ஆதல் தொடர்பான 7 சட்ட திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

* உத்தர பிரதேசத்தில்  2 ரயில்வே திட்டங்களுக்கும் அசாமில் ஒரு திட்டத்துக்கும் அனுமதி அளித்து ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, உத்தர பிரதேசத்தின் சாஜன்வா- டோக்ரிகாட் இடையே 81.17 கிமீ புதிய ரயில்வே பாதை ₹1,442 கோடியில்  அமைக்கப்படும். மற்றொரு வழித்தடம் உத்தர பிரதேசத்தின்  அலகாபாத்- முகல்சராய் எனப்படும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு வரை  150 கிமீ நீளத்துக்கு 3வது வழித்தடம்  ₹2,890 கோடியில் அமைக்கப்படும்.  இந்த திட்டம் 2023-24ம்  ஆண்டில் முடிக்கப்படும். இதன் மூலம் பரபரப்பாக உள்ள டெல்லி-கொல்கத்தா வழித்தடத்தில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

* அசாமில் புதிய பங்கைகான்- அக்தோரி இடையே இரட்டை ரயில்வே தடம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இது, 142.97 கிமீ நீளத்தில்  ₹2,248 கோடியில் ரயில் பாதை அமைக்கப்படும்.

* யமுனை ஆற்றின் மேல் 880 மீட்டர் பாலம் ₹237 கோடியிலும், டோன் ஆற்றின் மீது ₹96 கோடி மதிப்பீட்டில் 370 மீட்டர் அளவுக்கு மற்றொரு பாலமும்  கட்டப்படும்.

1,600 கோடியில்உயரமான அணை

அருணாசல பிரதேசத்தின் திபாங் ஆற்றில் 278 மீட்டர் உயரத்துக்கு அணை  கட்டப்படும். இதற்காக, ₹1,600 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவிலேயே மிக உயரமான அணையாக இது இருக்கும்.

அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்

‘அணைகள் பாதுகாப்பு மசோதா-2019’க்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, அணைகளின் ஆய்வு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர நாட்டிலுள்ள அணைகளை  பராமரிக்க தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

Related Stories: