கர்நாடகாவில் 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது

* உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

* குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
Advertising
Advertising

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் தனது கூட்டணி அரசு மீது முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்துகிறார். இந்நிலையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு ராஜினாமா செய்துள்ள அதிருப்தி  எம்எல்ஏக்களை நிர்பந்தபடுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது; அவரது முடிவில் தலையிட முடியாது என்று தீர்ப்பு  வழங்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த 1ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 6ம் தேதி  ராமலிங்கரெட்டி உள்பட 13 எம்எல்ஏக்கள்  ராஜினாமா கடிதம் கொடுத்தனர். 9ம் தேதி ரோஷன்பெய்க்கும் ராஜினாமா கடிதம் கொடுத்தார். கடந்த 10ம் தேதி எம்டிபி நாகராஜ், டாக்டர் கே.சுதாகர் ஆகியோர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். ஆளும் கட்சியில் உள்ள 16 பேர் ராஜினாமா  கடிதம் கொடுத்துள்ளதால் பேரவையில்ஆளும் கட்சியின் பலம் 101 குறைந்து, எதிர்க்கட்சியின் பலம் 107ஆக உயர்ந்துள்ளது.உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ள 15 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காமல் காலம் கடத்தி வருவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது. இவ்விசாரணையின் முடிவில் நேற்று காலை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகர் பதவி அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கபட்டது. அவரின்  அதிகாரத்தை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. உத்தரவு போட்டு கட்டுப்படுத்தவும் முடியாது. சபாநாயகருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

அதிருப்தி எம்எல்ஏகள் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. அதேபோல் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏகள் பதவி பறிக்ககோரி அரசியல் கட்சிகள் சார்பில்  கொடுத்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு உள்ளது. மேலும் ராஜினாமா கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடுவும் அவருக்கு நீதிமன்றம் வழங்க முடியாது. அரசியலமைப்பு சட்டம் 190 மற்றும் 508 கீழ்  சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதே நேரம் சபாநாயகரே குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதிருப்தி எம்எல்ஏகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டபேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. கலந்து கொள்வதும், புறக்கணிப்பதும் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு  உட்பட்டதாகும். மேலும் அவர்களை பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிறப்பிக்கும் கொறடா உத்தரவும் கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த தீர்ப்பு தற்காலிகமாக அதிருப்தி எம்எல்ஏகளுக்கு சாதகமாகியுள்ளது. அவர்கள் இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தாலும் கொறடா உத்தரவின் மூலம் எந்த நடவடிக்கையும் ஆளும் கட்சியால் எடுக்க  முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளும் கூட்டணியில் உள்ள 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதால், பேரவையில் கூட்டணியின் பெரும்பான்மை குறைந்துள்ளது. இதனால் முதல்வர் பதவி  விலகக்கோரி பாஜ வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. சட்டபேரவையிலும் இதே கோரிக்கை முன் வைத்து பாஜ போராட்டம் நடத்தும் என்பதை உணர்ந்த முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கைகோரும் தீர்மானம்  கொண்டுவருகிறோம். அதற்கு அனுமதியும், தேதியும் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். அதையேற்று ஜூலை 18ம் தேதி (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கினார். அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு  நடக்கிறது.

மாநில சட்டபேரவையில் தற்போது பாஜவுக்கு 2 சுயேச்சைகள் உள்பட 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு 101 உள்ளது. பிடிஎம் லே அவுட் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் பேரவை  கூட்டத்தில் கலந்துகொள்வாரா இல்லையா? என்பது தெரியவில்லை. அவர் கலந்துகொண்டு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தால் ஆளும் கூட்டணியின் பலம் 102 ஆக மட்டுமே உயரும். தற்போதைய சூழ்நிலையில் பேரவையில் ஆளும் கூட்டணிக்கு பலம் குறைவாகவுள்ளது. எதிர்கட்சியில் உள்ளவர்கள் யாராவது கட்சி மாறி ஆளும் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி ஆட்சி  வெற்றிபெறும்.சபாநாயகர் கையில்: அதிருப்தி எம்எல்ஏகள் கொடுத்துள்ள ராஜினாமா கடிதம் மற்றும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது சபாநாயகர் என்ன நடவடிக்கை  எடுப்பார் என்பது பொருத்தே நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணியின் வெற்றி தீர்மானிக்கப்படும். ரமேஷ்ஜாரகிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, ஆர்.சங்கர் ஆகியோரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி பறிக்ககோரி நேற்றும்  சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவையில் சபாநாயகரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: இது குறித்து முதல்வர் குமாரசாமி கூறுகையில், பேரவையில் ஆளும் கூட்டணிக்கு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால், தைரியமாக நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த நான் சபாநாயகரிடம் அனுமதி  கோரினேன். எனது கோரிக்கை மீது தான் வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அதிருப்தி எம்எல்ஏகளில் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்று அரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பங்கேற்கமாட்டோம்

மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் எச்.விஸ்வநாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருப்பதால், நாளை (இன்று) மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நடக்கும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் கலந்துகொள்ளாமல் தவிர்க்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் எடுத்துள்ள கொள்கை முடிவை எந்த நிலையிலும் மாற்றி கொள்ள மாட்டோம். நாங்கள் பணம் மற்றும் பதவிக்காக பதவியை ராஜினாமா  செய்யவில்லை. அரசியல் தூய்மை பெற வேண்டும், சந்தர்ப்பவாதம் மறைய வேண்டும், மக்களுக்கு சேவை செய்யும் சிறப்பான ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளோம். எங்கள்  ராஜினாமாவை அங்கிகரிப்பது தொடர்பாக சபாநாயகர் நல்ல முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி அரசுக்கு ஆதரவாக செயல்படுவேன் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories: