ஐ.சி.ஜே இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்: குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்...பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு  பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது.  ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனையை எதிர்த்து  இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனைக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை நீதிமன்றம்,விசாரித்தது. இந்நிலையில் இரு தரப்பு  வாதங்களை விசாரித்த தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார். குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடைவிதித்து, குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு  ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

இந்நிலையில், குல்பூஷண் ஜாதவ் தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். சத்தியமும் நீதியும் மேலோங்கியுள்ளது. உண்மைகளை  விரிவாக ஆய்வு செய்வதன் அடிப்படையில் தீர்ப்பளித்த ஐ.சி.ஜேவுக்கு வாழ்த்துக்கள். குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நமது அரசு எப்போதும் செயல்படும்  என்று குறிப்பிட்டுள்ளார்.  

சுஷ்மா ஸ்வராஜ் கருத்து:

சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ்,  குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமனதாக வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. அத்துடன்  வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கும் நன்றி. இந்த தீர்ப்பு குல்பூஷண் ஜாதவின் குடும்பத்திற்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: