விசேஷ பூஜைகளுடன் ஆரம்பமானது ஆடிமாதம் களப்பலியான அரவாணுக்கு தேங்காய் சுட்டு வழிபடும் மக்கள்

திருச்செங்கோடு: ஆடி மாதம் இன்று தொடங்கியது. இதையொட்டி சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தேங்காய் சுட்டு வழிபடும் நிகழ்வு இன்று மாலை நடக்கிறது. இதன் பின்னணி குறித்து ஆன்மீக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆடி முதல் நாளிலிருந்து 18ம் தேதி வரை மகாபாரதத்தில் வரும் குருசேத்திரத்தில் பாண்ட வர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் நடந்தது. போரின் முதல் நாளில் களப்பலி கொடுக்க வேண்டியது கட்டாயம். அனைத்து லட்சணங்களும் பொருந்திய வாலிபனை பலி கொடுத்து போரை தொடங்க வேண்டும். அனைத்து லட்சணங்களும் பொருந்திய மூவர் மட்டுமே இருந்தனர். கிருஷ்ணன், அர்ச்சுணன், அரவாண் ஆகியோரே இவர்கள். கிருஷ்ணரும், அர்ச்சுணரும் போர்க்களத்தில் இருக்க வேண்டி இருந்தது. ஆகவே அர்ச்சுணனுக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்த அரவாணை பலி கொடுக்க முடிவானது. அரவாணும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் தான் இறந்தாலும் 18 நாள் போரைக் காண வேண்டும் என்கிறார். ஆகவே அவரைப் பலி கொடுத்து விட்டு தலையை மட்டும் தனியாக எடுத்து ஒரு ஈட்டியில் வைத்து உயரமான ஒரு இடத்தில் நட்டு போர் முழுவதையும் அவர் பார்க்க ஏற்பாடு செய்கின்றனர்.

இதனை நினைவு கூறும் பொருட்டே தேங்காய் சுடும் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடு கின்றணர். தேங்காய்தான் அரவாண் தலை. சிறுவர் சிறுமிகள் தேங்காயை நன்றாக தேய்த்து பிசிறு இல்லாமல் செய்கின்றனர். பிறகு தேங்காயிலிருக்கும் நீரை வெளியேற்றி அதில் இனிப்பு, கடலை போன்ற பொருட்களை இட்டு அழிஞ்சி குச்சியால் மூடுவார்கள். தீ மூட்டி இதனை கோலாகலத்துடன் சுட்டு கோயில்களுக்கு எடுத்துச் சென்று சுவாமிக்கு படைத்து விட்டு வீட்டிற்கு கொண்டு வந்து சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இது ஒகு குதூகலமான நிகழ்ச்சி. தேங்காய் சுட அழிஞ்சிக் குச்சிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆன்மீக ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: