வரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை சரிவு: கிலோ ரூ.25க்கு விற்பனை

பாவூர்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை மளமளவென சரிந்து கிலோ ரூ.25க்கு விற்பனையானது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், அருணாப்பேரி, பட்டமுடையார்புரம், சிவகாமிபுரம், நாட்டார்பட்டி, சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம், கருமடையூர், மூலக்கரையூர், ஆவுடையானூர், அரியப்புரம், மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, கல்லூரணி, திப்பணம்பட்டி மற்றும் மானூர் ஒன்றியம் களக்குடி, ஆலங்குளம், சேர்ந்தமரம், வீராணம் பகுதியில் இருந்து விவசாயிகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு மிளகாய் விற்பனைக்கு கொண்டு வருவர்.

Advertising
Advertising

கடந்த சில வாரங்களுக்கு முன் மார்க்கெட்டிற்கு உள்ளூர் மிளகாய் குறைந்த அளவே விற்பனைக்கு வருவதால் மைசூர் மற்றும் தமிழகத்தின் வடமாவட்டமான ஓசூர், ஓட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மிளகாயை மொத்த வியாபாரிகள் தங்களது தேவைக்கேற்ப கொள்முதல் செய்து விற்பனை செய்தனர். பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய குறைந்த அளவே வந்ததால் மிளகாய் கடந்த வாரம் கிலோ ரூ.70 முதல் 90 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தை தந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து மிளகாய் மகசூல் அதிகரிப்பாலும், வெளிமாவட்டத்தில் இருந்து வழக்கமாக 10 டன் முதல் 15 டன் வரை விற்பனைக்கு வந்த மிளகாய் தற்போது 20 டன் முதல் 30 டன் வரை விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனையானது. இந்த விலை இறக்கத்தால் மிளகாய் விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories: