தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை: ஆய்வு செய்த மத்தியக்குழு அறிவிப்பு

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளதாக மத்தியக்குழு தெரிவித்துள்ளது. ஜெயசீலன் ஜ.ஏ.எஸ். மற்றும் நீர் மேலாண்மை விஞ்ஞானி ஞானசுந்தர் ஆகியோர் தலைமையிலான ‘ஜல்சக்தி அபியான்’ என்ற மத்திய அரசு குழுவினர் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்கள். இவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குறித்து நேரில் பார்வையிட்டதுடன் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார்கள்.

நேற்று இந்த குழுவினர், மேட்டுப்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் குழுவின் முதன்மை அதிகாரி ஜெயசீலன் கூறியதாவது: தமிழகத்தில் 26 மாவட்டங்கள் தண்ணீர் பிரச்னை உள்ள மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் விவசாயத்திற்கும், தாவரங்களுக்கும் உயிர்வாழ கிடைக்கும் மேல்மட்ட நீர், ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் கீழ்மட்ட நீர் என இரண்டு விதமாக பிரித்து நீர்மட்டத்தை ஆய்வு செய்துள்ளோம். இரண்டு விதமான நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. 1000 அடி முதல் 1600 அடி வரை ஒரு சில இடங்களில் உள்ளது. இது அபாயகரமானது.

இதற்கு காரணம் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இல்லாததே. மழைநீர் பூமிக்குள் செல்லும் அளவை விட, வெளியில் எடுக்கும் நீரின்அளவு அதிகம். ஆண்டுக்கு ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்பட பல தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவை தாண்டி செல்கிறது. மத்திய அரசு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் செயற்கைகோள் உதவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஏரிகளின் பாதிக்கப்பட்ட நீர்வழி பாதைகளை கண்டறிந்து சீர்செய்யும் பணியை துவக்கி, பாதிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மத்தியஅரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், ஏரிகள், ஆழ்குழாய் கிணறுகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும். மழைநீர் சேகரிக்கவும் அவற்றை பயன்படுத்துவது குறித்தும் தமிழக அரசுடன் இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் குளியல் நீர், கைகழுவும் நீர், துவைக்கும் தண்ணீர் ஆகியவற்றை சுத்திகரிப்பு செய்து அதனை பயன்படுத்த ரூ.30 லட்சம் மதிப்பில் மறு சூழற்சி முறையை ஏற்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மத்திய குழுவினருடன் மேட்டுப்பாைளையம் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகராட்சி இன்ஜினியர் கணேசன், நகர அமைப்பு ஆய்வாளர்கள் வீரமணி, மீனாட்சி, மேலாளர் முத்துக்குமார், ஜெயராமன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.

Related Stories:

>