தனியார் தொலைதூர கல்வி மையங்களில் தேர்வெழுதிய 10 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காமல் பரிதவிப்பு: காமராஜர் பல்கலை. மீது பரபரப்பு புகார்

மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் தொலைதூர கல்வி மையங்களில், தேர்வு எழுதிய சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் தமிழகம் முழுவதும், சுமார் 300 தொலைதூரக் கல்வி பயிற்சி மையங்கள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வந்தன. இப்பயிற்சி மையங்களில் இளங்கலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள், முதுகலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள், டிப்ளமோ பாடப்பிரிவுகள், முதுகலை டிப்ளமோ பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.

Advertising
Advertising

இவர்கள் முறையாக காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தேர்வுக்கட்டணம் செலுத்தியதும் தேர்வு அதிகாரிகள் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இத்தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தி, மதிப்பெண் பட்டியல் தயாரித்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம், தனியாரிடம் ஒப்படைத்துள்ள தொலைதூரக்கல்வி பயிற்சி மையத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. தனியார் தொலைதூரக் கல்வி மையங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததால், சுமார் 10 ஆயிரம் மாணவர்களுக்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. இப்படி இயங்கும் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கையின்போது கல்விக்கட்டணம் செலுத்தியவர்களில் 100 சதவீதம் பேரும் முழுமையாக கல்வியை தொடர்வதில்லை. மாணவர் சேர்க்கையின்போது சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் அந்த படிப்பிற்கான முழு கல்விக் கட்டணமும் செலுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சான்றிதழ் வழங்குவோம் என பல்கலைக்கழகம் தனியார் பயிற்சி மையங்களை நிர்ப்பந்தித்து வருகிறதாம். இதனால் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து தேர்வு எழுதிய மாணவர்களின் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படாமல் உள்ளன. இதுகுறித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திடம் கேட்டால், தனியார் பயிற்சி மையங்கள், அனைத்து மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும் முழுமையாக செலுத்தவில்லை எனக்காரணம் கூறி திருப்பி அனுப்பி வருகிறது.

தனியார் தொலைதூரக்கல்வி பயிற்சி மைய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தனியார் தொலைதூர பயிற்சி மையத்தில் சேரும் அனைத்து மாணவர்களும் அந்த கோர்ஸ் முடியும் வரை தொடர்வதில்லை. இவர்களில் பலர் சேர்க்கை கட்டணம் செலுத்திய பிறகு படிப்பை தொடராமல் பாதியிலேயே விட்டு விடுகின்றனர். சேர்க்கையில் உள்ள அனைத்து மாணவர்களுக்குமான முழு கல்விக்கட்டணத்தையும் செலுத்தினால்தான், ஏற்கனவே முழு கல்வி கட்டணத்தையும் செலுத்தி தேர்வு எழுதி சான்றிதழுக்காக காத்திருக்கும் இதர மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்க முடியும் என பல்கலைக்கழக நிர்வாகம் பிடிவாதம் பிடிக்கிறது.

இதுகுறித்து தனியார் பயிற்சி மையங்களை நடத்தி வரும் நிர்வாக இயக்குநர்களை அழைத்து பேசவும் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்து வருகிறது. இதுபோன்ற செயலால் தமிழகம் முழுவதும் தனியார் தொலைதூரக்கல்வி பயிற்சி மையத்தில் முழுக்கட்டணமும் செலுத்தி, படித்து தேர்வு எழுதிய சுமார் 10 ஆயிரம் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படித்த மாணவ, மாணவிகள் சான்றிதழ் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர். இந்த விவகாரம் குறித்து காமராஜர் பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி மைய தேர்வாணையர் ராஜராஜன் கூறுகையில், ‘‘தொலைதூர கல்வி மையத்தில் படித்த அனைவருக்கும் உரிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையின் மீது தொடர்ந்து தவறான தகவல்களை தனியார் தொலைதூர கல்வி மையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்’’ என்றார். காமராஜர் பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி மைய இயக்குனர் விஜயதுரை கூறுகையில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழக தனியார் தொலைதூர கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் அனைத்தும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. புதிய தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி தற்போது வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக தனியார் தொலைத்தூர மைய உரிமையாளர்கள் தவறான தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: