பருவமழை பொய்த்ததால் மதுரை மாவட்டத்தில் குடிநீருக்கு சிக்கல்: வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை

மதுரை: தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், மதுரை மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மதுரை மாவட்ட மக்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து தினமும் 60 கனஅடி தண்ணீர் எடுத்து மதுரை மாநகர், உசிலம்பட்டி, சேடபட்டி,  கருமாத்தூர், கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் ஆனையூர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கேரளாவில் 45 சதவீதம் மட்டும் மழை பெய்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததால்தான் பெரியாறு, வைகை அணைகளிலும் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட கண்மாய்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும்.

தொடர்ந்து பெய்யும் வடகிழக்கு பருவமழையால் அணைகள், கண்மாய்கள் பெருகி, பாசன வசதி பெற முடியும்.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. எதிர்பார்த்த மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 27.79 அடி. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர்வரத்து மட்டுமே உள்ளது. அணையில் மொத்தம் 289 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 23 அடி மண் படிந்துள்ளது. மீதியுள்ள 4.79 அடி தண்ணீர் மட்டுமே மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீருக்காக உள்ளது. இது 15 நாட்களுக்கு கூட போதாது. இதனால் மதுரை மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. நேற்று முதல் அணையில் இருந்து குடிநீருக்காக 40 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 112.05 அடி. குறைந்தது 108 அடி நீர்மட்டம் இருந்தால்தான், குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும்.

தற்போது அணைக்கு வினாடிக்கு 57 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால், பெரியாறு அணையில் இருந்தும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க முடியாது. இந்தாண்டு, பருவமழை பெய்யாததால், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டத்தில் உள்ள 65 ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் தரிசாக கிடக்கின்றன. விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை மாநகரின் ஒருநாள் குடிநீர் தேவை 300 மில்லியன் லிட்டர். ஆனால் 170 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குழாயடியில் பெண்கள் காலி குடங்களுடன் இரவிலும் காத்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழையை நம்பி விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்,’’ என்றார்.

Related Stories: