தமிழக அரசின் எதிர்ப்பை மீறி அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertising
Advertising

மசோதாவிற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு

நாடு முழுவதும் உள்ள அணைகளை முறைப்படுத்தி பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் கொண்ட, மசோதா ஒன்றை கடந்தாண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தி அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவால் தமிழகத்திற்கு பாதகம் ஏற்படும் என்று கூறி தமிழக முதலமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.அணை பாதுகாப்பு மசோதாவில் ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால்  அதன் பராமரிப்பும், இயக்கமும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.  

இதேபோல், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணைகள், வனப்பகுதியில் இருந்தால் அந்த அணைகளை மாநில அதிகாரிகளே நிர்வகிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.அணைகளை மாநில அரசே பராமரிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல்

இந்நிலையில், இந்த மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட மசோதாவுக்கு இன்று மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் அளித்தது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முல்லை பெரியார், பரம்பிக்குளம் பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு உள்ளிட்ட அணைகளின் மீது தமிழக அரசிற்கு இருக்கும் உரிமை பறிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது

அணை பாதுகாப்பு மசோதா 2019

அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்க இந்த மசோதா வழிவகுக்கிறது. நாட்டில் 5600 அணைகளின் பாதுகாப்பு நடவடிக்கையை அணை பாதுகாப்பு மசோதா உள்ளடக்கியது. மாநிலங்களில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: