வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தமது தந்தையும் தி.மு.க. பொருளாளருமான துறைமுருகனுடன் வந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.

வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையொட்டி அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை, தேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தனித்தனியாக அறிக்கை அனுப்பினர்.அதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தலுக்கு ஒருநாள் முன்பு அறிவிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதி தேர்தல்

இந்நிலையில், பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி அறிவித்தது. அதன்படி,

*வேட்புமனு தாக்கல் வருகிற 11ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும்.

*மனுக்கள் மீது 19ம் தேதி பரிசீலனை நடைபெறும்.

*வேட்புமனுக்களை 22ம் தேதி மாலை வரை வாபஸ் வாங்கலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

*ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ம் தேதி நடத்தப்படும்.

திமுக வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் அறிவிப்பு

இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தோழமை கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோன்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்

இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கதிர் ஆனந்த் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தமது தந்தையும் தி.மு.க. பொருளாளருமான துறைமுருகன் உட்பட திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் வந்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலரான வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கதிர் ஆனந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாளையுடன் இந்தத் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. ஏற்கனவே

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் உள்பட 18 பேர் இந்த தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி

இதையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கிறது என்றும்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: