முக்கடல் சங்கமத்தில் பாதுகாப்பு குறைபாடு... விபரீதம் அறியாத வெளியூர் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்படுகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளே வருகின்றனர். உள்ளூர் மற்றும் தமிழக பயணிகள் அதிகம் வருவதில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரியில் பாதுகாப்பு முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. கடலோர பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், சுற்றுலா போலீசார், உள்ளூர் போலீசார் உள்ளனர். ஆனால் இவர்கள் யாரையும் தற்போது கடற்கரை பகுதிகளில் காண முடிவதில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் உள்ள ஆபத்தான பாறைகளுக்கு எந்த தடையுமின்றி செல்கின்றனர். கடலில் உள்ள பாறைகள் மரண பாறைகளாக உள்ளன. இங்கு ராட்சத அலையில் சிக்கி பலர் உயிர் இழந்துள்ளனர். ஆனால் இது தெரியாத வடமாநில சுற்றுலா பயணிகள் அலையை அருகில் நின்று ரசிப்பதற்காகவும், அலையோடு செல்பி எடுப்பதற்காகவும் இந்த மரண பாறைகளுக்கு செல்கின்றனர்.

ஆபத்தான இந்த செயலை தடுக்கவும் எச்சரிக்கவும் இங்கு போலீசார் யாரும் இருப்பதில்லை. தற்போது கடல் நீர்மட்டம் குறைவு மற்றும் அதிகரிப்பு காரணமாக கடல் நிலையற்ற நிலையில் உள்ளது. எனவே மரண பாறைக்கு செல்லும் பயணிகளை கட்டுப்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் போதுமான போலீசார் நியமிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை எச்சரித்து வழிகாட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: