சேரன்மகாதேவியில் மதுபானம் ஏற்றி வந்த லாரி ரயில்வே கேட்டில் மோதியது

வீரவநல்லூர்: மதுபானம் ஏற்றி வந்த லாரி மோதியதில் சேரன்மகாதேவி ரயில்வே கேட் சேதமடைந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து நெல்லை நோக்கி நேற்று மதியம் 12.30 மணியளவில் பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து சேரன்மகாதேவி மேல ரயில்வே கேட்டில், பணியில் இருந்த பெண் ஊழியர் கேட்டை அடைக்க முயன்றார். அப்போது அவ்வழியாக மதுபானம் ஏற்றி அம்பை நோக்கி சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக கேட்டின் மீது மோதியது. இதில் கேட் முற்றிலும் சேதமடைந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து பெண் ஊழியர், ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு பாதுகாப்பு சங்கிலி மூலமாக தற்காலிகமாக சாலையை மறித்து தடுப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து ரயில் வரும் திசைநோக்கி கொடியசைத்தபடி விரைந்து சென்றார். இதைப் பார்த்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தவே அவரிடம் விபரத்தை தெரிவித்தார். தொடர்ந்து ரயில் மெதுவாக கேட்டினை பாதுகாப்பாக கடந்து சென்றது.

இச்சம்பவத்தால் சேரன்மகாதேவி சாலையில், ரயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. டூவிலரில் சென்றவர்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றனர். உடனடியாக வாகனங்கள் அனைத்து கீழ ரயில்வே கேட் வழியாக திருப்பி விடப்பட்டு அரை மணி நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தொடர்ந்து சேதமடைந்த ரயில்வே கேட்டை சரிசெய்யும் பணிகள், இரவு 10 மணி வரை நடந்தது. இதன் காரணமாக ரயில்கள் இவ்வழியாக கடந்து சென்றபோது பாதுகாப்பு சங்கிலி கட்டப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தென்காசி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: