வாரம்தோறும் ரூ.1 கோடி வரை வியாபாரமாகிறது... சகதிக்குள் சிக்கித்தவிக்கும் பொய்கை மாட்டுச்சந்தை

வேலூர்: வாரம்தோறும் ரூ.1 கோடி வரை வியாபாரம் நடக்கும் வேலூர் பொய்கை மாட்டு சந்தை அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சேறு, சகதிக்குள் சிக்கித்தவிக்கிறது. வேலூர் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பொய்கை மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

வழக்கமாக பொய்கை மாட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகள், எருது மற்றும் உழவு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தையில் அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வருவார்கள். இதில் ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாகும். அந்த வகையில் வாரம்தோறும் ரூ.1 கோடி வரை வியாபாரம் நடக்கும். இந்த நிலையில் நேற்று மழை காரணமாக குறைந்த மாடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ரூ.60 லட்சம் வரை வர்த்தகம் நடந்தது. இத்தகைய வருமானம் ஈட்டும் பொய்கை மாட்டுச் சந்தை அடிப்படை வசதியின்றி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மாட்டு சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளது.

நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் சேறும், சகதியுமான இடத்திலேயே கால்நடைகளை கட்டி வைத்து விற்பனை செய்தனர். அதேபோல் மாட்டுச்சந்தையில் குடிநீர் வசதியோ, கால்நடைகளுக்கான தண்ணீர் வசதியோ, கழிவறை, குளியலறை வசதியோ என எந்த அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படுகிறது. எனவே, பொய்கை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கால்நடை வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர். விற்பனை தொடர்பாக மாட்டு சந்தை நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களாக வறட்சியின் காரணமாக கால்நடை வியாபாரம் குறைந்து காணப்பட்டது. தற்போது வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளதால் இனிவரும் வாரங்களில் கால்நடை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Related Stories: