தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்கப்படுமா?

நெல்லை: நெல்லை, குமரியில் இருந்து திருப்பதிக்கு நேரடி தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். திருப்பதிக்கு பல்வேறு இடங்களை சுற்றிச் செல்லும் பகல் நேர ரயில்களால் கூடுதல் நேரம் ஆவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து வாரம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு செல்கின்றனர். சென்னை, மன்னார்குடி, ராமேஸ்வரம் என குறிப்பிட்ட சில இடங்களில் இருந்ேத திருப்பதிக்கு ரயில்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருப்பதிக்கு நேரடி ரயில் வசதி மிகக்குறைவு. தென்மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ஒரேயொரு ரயிலான ராமேஸ்வரம் - திருப்பதி ரயிலும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று அதிக நேரத்தை விரயமாக்கியே திருப்பதியை சென்றடைகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கவும், அங்கு பக்தர்களுக்கு சேவை செய்யவும் அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால் இம்மாவட்டங்களில் இருந்து நேரடி ரயில் வசதியின்றி தவிக்கின்றனர். முன்பு ஞாயிறு, வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.16351, 16352) திருப்பதி செல்லும் பயணிகளுக்கு ஓரளவுக்கு வசதியாக இருந்தது. ஆனால் அந்த ரயிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி செல்வது நிறுத்தப்பட்டு ரேணிகுண்டா வழியாக செல்வதால் பக்தர்கள் அந்த ரயிலிலும் பயணிக்க தயங்குகின்றனர்.

நெல்லையில் இருந்து ஜம்முதாவி செல்லும் மாதா வைஷ்ணவி தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே புறப்பட்டு செல்கிறது. அந்த ரயில் திருப்பதி வழியாக சென்றாலும், நெல்லையில் அந்த ரயிலுக்கு சுமார் 40 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே அந்த ரயிலும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இல்லை. நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவிற்கு செவ்வாய்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர ரயிலும் திருப்பதி வழியாகவே செல்கிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து செவ்வாய் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு இரவு 1.05 மணிக்கு திருப்பதி சென்று சேருகிறது. இந்த ரயிலின் கால அட்டவணை பகலில் அமைவதால், பயணிகள் நள்ளிரவு நேரத்தில் திருப்பதியை அடைந்து திண்டாடி நிற்கின்றனர். நெல்லை - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், நெல்லை - ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வாராந்திர ரயில்களும் ரேணிகுண்டாவோடு பயணத்தை நிறுத்திக் கொள்கின்றன. அதில் இருந்து பயணிகள் பஸ் அல்லது ரயிலில் திருப்பதி செல்ல வேண்டியதுள்ளது.

மேலும் இவ்விரு ரயில்களும் ஞாயிற்று கிழமைகளில் புறப்படுவதால் பயணிகள் வார நாட்களில் திருப்பதி செல்ல தயங்குகின்றனர். இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த தியாகராஜநகர் செல்வக்குமார் கூறியதாவது: தென்மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்ல ஒரு தினசரி ரயில் கூட உருப்படியாக இல்லை. தென்மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரயில்கள் ஏதோ பெயரளவிற்கு திருப்பதியை தொட்டுச் செல்கின்றன. இந்த ரயில்கள் வாராந்திர ரயில்களாகவும் இருப்பதால் பக்தர்கள் இவற்றை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. கச்சிகுடா ரயில் திருப்பதி செல்லும் நேரமும், வரும் நேரமும் நள்ளிரவாக உள்ளது. எனவே அதை பக்தர்கள் பயன்படுத்த முடிவதில்லை. பக்தர்கள் கூட்டம் மொய்க்கும் திருப்பதி உள்ளிட்ட புனித தலங்களுக்கு தென்மாவட்டங்களில் இருந்து நேரடியாக ஒரு தினசரி ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும். அந்த ரயில் நெல்லையில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் இயக்கப்பட்டால், பக்தர்கள் அதிகாலையில் திருப்பதி செல்ல வழிபிறக்கும். கன்னியாகுமரி அல்லது திருச்செந்தூர் ஆகிய ஆன்மீக தலங்களில் இருந்தும் திருப்பதிக்கு நேரடி ரயிலை இயக்கலாம்.’’ என்றார்.

நேரத்தை வீணடிக்கும் எக்ஸ்பிரஸ்கள்

நெல்லையில் இருந்து திருப்பதிக்கு நேர் வழியில் சென்றால் 688 கி.மீ தூர பயணத்தில் திருப்பதியை எட்டிவிட முடியும். நெல்லை, மதுரை, சேலம், காட்பாடி வழியாக ரயில்கள் இயக்கமே இதற்கு சிறந்த வழியாக உள்ளது. ஆனால் தெற்கு ரயில்வே இயக்கும் ரயில்கள் அனைத்துமே தலையை சுற்றி மூக்கைத் தொடுவதாகும். குறிப்பாக நெல்லை - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் திருப்பதி அருகேயுள்ள ரேணிகுண்டா செல்ல 1043 கி.மீ தூரம் பயணிக்கிறது. அதாவது திருவனந்தபுரம் மார்க்கமாக கேரளா சென்று, கோவை, ஈரோடு வழியாக ரேணிகுண்டா சென்று பக்தர்களை தலைசுற்ற வைக்கிறது.

நெல்லை- ஜம்முதாவி எக்ஸ்பிரசோ நெல்லையில் இருந்து புறப்பட்டு ஈரோட்டில் சென்று படுத்துக் கொள்கிறது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கேரளா வழியாக வரும் ரயிலின் பெட்டிகள் அதனோடு இணைக்கப்பட்டு ஆமை வேகத்தில் திருப்பதி செல்கிறது. இந்த ரயில் செல்ல 824 கி.மீ தூரம் எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு ஊர் சுற்றி செல்லும் ரயில்களால் பக்தர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே தென்மாவட்டங்களில் இருந்து சேலம் வழியாக திருப்பதிக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாகும்.

Related Stories: