கடும் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு... அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் கால்நடைகள்

வேதாரண்யம்: கடும் வறட்சி நிலவுவதால் வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுகா செண்பகராயநல்லூர் ஊராட்சியில் மாட்டுசந்தை உள்ளது. சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த சந்தையில் வேதாரண்யம் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 300க்கும் அதிகமான காளை மற்றும் பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவற்றை பல்வேறு ஊர்களிலிருந்து வரும் மக்களும், வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். தற்போது சந்தையில் படிப்படியாக மாடுகளின் வருகை குறைந்து சுமார் 100 மாடுகள் மட்டுமே விற்பனைக்காக வருகிறது. இதுகுறித்து சந்தையின் ஒப்பந்ததாரரான ராகவன் கூறுகையில், சந்தையின் ஏலத்தை எனது மூதாதையர் காலம் தொட்டு எடுத்து நடத்தி வருகிறோம். இங்கு வரும் மாடுகள் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டு நாகை மாவட்ட பகுதியில் ஏற்பட்ட கஜா புயலால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது நிலவும் வறட்சியால் தண்ணீர் இல்லாததால் சாகுபடி விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்காக உள்ள மாடுகளை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை தங்களது பிள்ளைகளின் கல்வி செலவிற்காக பயன்படுத்துவதாக கூறி மாடுகளை விற்பனை செய்கின்றனர். இங்கு வரும் வியாபாரிகள் அந்த மாடுகளை பெற்று பட்டுக்கோட்டை, மணப்பாறை உள்ளிட்ட பகுதி சந்தைகளுக்கு லாரி மற்றும் வேன்களில் ஏற்றி செல்கின்றனர். ஏற்றி செல்லப்படும் மாடுகள் இறைச்சிக்காகவும் வளர்ப்பிற்காகவும் வாங்கி செல்கின்றனர். விற்கப்படும் மாடுகள் எண்ணிக்கை குறித்து பஞ்சாயத்து மூலம் அளிக்கப்படும் சீட்டில் விவரத்தை எழுதி கொடுப்பதன் மூலம் வியாபாரிகளுக்கு வழியில் எந்தவித பிரச்சனையும் ஏற்படுவது இல்லை. சனிக்கிழமை தோறும் சந்தை காலை 6 மணி தொடங்கி 10.30 மணி வரை நடைபெறும். மாடு ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

Related Stories: