பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம்

டெல்லி : பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாநிலங்களில் தமிழகம் 2ம் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மந்திரி ரோஜ்கர் ப்ரட்ஷான் யோஜனா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் படி ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான நிதியை அரசே அளிக்கும் வகையில் தொழில் தொடங்குவோருக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தால் ஆகஸ்ட் 2016 முதல் மார்ச் 2019ம் ஆண்டு வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இந்த மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் 57% அளவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் பயன்பெற்றுள்ளன.

மார்ச் 2019 வரை 1,18,05,003 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் மகாராஷ்டிரா 18%மும் தமிழ்நாடு 12%மும், கர்நாடக 10%மும் பங்கு வகிக்கின்றன. மேலும் குஜராத் 9 சதவீதமும், ஹரியானா மற்றும் ஆந்திராவில் தலா 8 சதவீதமும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். உத்தரபிரதேசம் (7 சதவீதம்), டெல்லி (6 சதவீதம்), ராஜஸ்தான் (4 சதவீதம்), மேற்கு வங்கம் (3 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (3 சதவீதம்) பெற்ற நிலையில், உத்தரகண்ட், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தலா 2%மும், ஒடிசா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் தலா 1%மும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.தமிழகத்தில் மட்டும் 14,17,808 பேர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மொத்த எண்ணிக்கையில் 40% வேலைவாய்ப்புகள் மென் பொருள் துறையில் ஏற்பட்டுள்ளன. வர்த்தகம், ஜவுளி, கட்டுமானத் துறைகளில் 7%மும்  பொறியியல் துறையில் 5%மும் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


× RELATED மாநகராட்சி பிடிவாதத்தால் ஜவுளி...