எச்சரிக்கை பலகை இல்லாமல் அச்சுறுத்தும் அபாய வளைவு சாலை

காரியாபட்டி: காரியாபட்டி அருகே, அபாய வளைவு சாலையில், முன்னெச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி அருகே, திருச்சுழி மெயின்ரோட்டில் அபாயகரமான பல வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் குறுகிய கால இடைவெளியில் பல விபத்துக்கள் நடந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வளைவில், ‘ஆபத்தான வளைவு மெதுவாக செல்லவும்’ என சிகப்பு முகப்பு ஸ்டிக்கர் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. இந்த சாலை திருச்சுழி, மானாமதுரை, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், பசும்பொன் வரை செல்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

மேலும் திருச்சுழி தொகுதி குவாரிகளில் மணல் அள்ளி வரும் லாரிகள், இந்த சாலையில் சாரை, சாரையாக வந்து செல்கின்றன. தோப்பூர், சித்துமூன்றடைப்பு, பி.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அரசு பள்ளிகள் மெயின் ரோட்டில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் சைக்கிள்களிலும், நடந்தும் செல்கின்றனர். வளைவுகளில் வேகமாய் வரும் வாகனங்களால், அவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தனியார் ரைஸ்மில் வளைவில் நடந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகமானது. எனவே, அபாய வளைவு சாலையில் முன்னெச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: