தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் சோலையார் அணைக்கு நீர்வரத்து சரிவு

வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வால்பாறை பகுதியில் பெய்யும் மழையால் பி.ஏ.பி பாசன திட்ட அணைகள் நிறைந்து ஆண்டு முழுவதும் 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் பாசன திட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததுள்ளது. நீர் பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 2 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் சோலையார் அணையில் 8 மி.மீ, வால்பாறையில் 2 மி.மீ., கீழ் நீரார் அணையில் 1 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேல் நீரார் அணைக்கு 171 கனஅடி நீர் வரத்தும், கீழ் நீரார் அணைக்கு 26 கன அடி நீர் வரத்தும் இருந்தது. இவற்றுடன் காட்டாற்று நீரும் சேர்ந்து சோலையார் அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி நீர் வரத்துள்ளது. 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணையில், தற்போது நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. அணையில் இருந்து 519.44 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு சோலையார் மின்நிலையம் 2 இயக்கப்பட்டு, கேரளா சோலையார் அணைக்கு நீர் வெளியேறுகிறது. சோலையார் அணையில் 738 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

Related Stories: