விதியை முடிக்க வந்த விரியன் சிக்கியது தீயணைப்பு துறையிடம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விரியன் பாம்பை இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் பிடித்தனர். கொடைக்கானல் ஆனந்தகிரி 5வது தெரு பகுதியில் நேற்றுமுன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கணேசன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிப்பதற்கு முயன்றனர். ஆனால் பாம்பு அந்தப் பகுதியிலிருந்து மறைவான பகுதிக்கு சென்று விட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடியும் பாம்பு கிடைக்காததால் நீண்ட போராட்டத்திற்கு பின் வெறுங்கையுடன் திரும்பினர்.

இந்நிலையில் மீண்டும் இதே பகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் விரியன் பாம்பு நுழைந்தது. இதைப் பார்த்த இந்த பகுதியில் இருந்த பெண்களும், ஆண்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மீண்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எட்டடி நீளமுள்ள விரியன் பாம்பு பிடிபட்டது. பிடிபட்ட பாம்பை சாக்குப் பையில் போட்டு வனத்துறையினர் மூலம் வனப்பகுதிக்குள் விட்டனர். விதி முடிந்தவர்களை தான் விரியன் பாம்பு கடிக்கும் என்பது பழமொழி. மிகுந்த விஷத்தன்மை உள்ள இந்த விரியன் பாம்பை தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத அளவிற்கு பிடித்ததை இந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories: