×

சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு... சுந்தரமகாலிங்கத்துக்கு 18 வகை அபிஷேகம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பவுர்ணமி வழிபாட்டையொட்டி, நேற்று இரவு சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பக்தர்கள் வருகை இல்லை என தெரிவித்தனர். வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனடிப்படையில், பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் இன்று (ஜூலை 17) வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பவுர்ணமி மற்றும் இன்று ஆடி மாதப் பிறப்பையொட்டி, நேற்று காலை கோயிலுக்குச் செல்ல தாணிப்பாறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர். 6 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றனர்.

பவுர்ணமியையொட்டி இரவில் சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிசேஷகங்கள் நடைபெற்றன. பின், சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவராமசூரியன் செய்திருந்தார். பக்தர்கள் வருகை குறைவு: நேற்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு, கோயிலுக்கு குறைந்த அளவிலே பக்தர்கள் வருகை தந்திருந்தனர். குடிநீர் தட்டுப்பாடு, அன்னதான கூடங்கள் மூடல் ஆகிய காரணங்களால் வருகை குறைந்ததாக தெரிவித்தனர். வருகிற 31ம் தேதி ஆடி அமாவாசை விழா கொண்டாட உள்ள நிலையில், அதற்குள் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chaturagiri, Sundaramakalingam
× RELATED சதுரகிரியில் மழையில்லாததால் வறண்டு கிடக்கும் வழுக்கல் அருவி