இனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது

வாஷிங்டன்: பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்து கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கண்டித்து பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

Advertising
Advertising

பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறார். இதனால், பல்வேறு இனவெறி கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களுக்கு எதிராக டிவிட்டரில் அவர் கூறிய கருத்து அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது டிவிட்டரில், ‘‘அமெரிக்க அரசு எப்படி செயல்பட வேண்டுமென புத்திமதி கூறும் பெண் எம்பிக்களின் பூர்வீக நாடுகள் முழுவதும் பேரழிவை சந்தித்தவை. எனவே, அவர்களுக்குள்ள அறிவை பயன்படுத்தி, சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று அங்குள்ள குற்றங்களை களைய உதவி செய்யலாமே’’ என்றார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பிக்களான கார்டெஸ், உமர், ரசிதா, அயானா ஆகியோர் சமீபகாலமாக டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருபவர்கள். இவர்களில் உமர் தவிர மற்ற 3 பேரும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். உமர் சோமாலியாவில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்கா வந்தவர். 4 பேரின் பூர்வீகமும் வெவ்வேறு நாடுகள். இவர்களைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து, இனவெறி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.  

அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேறியது

டிரம்ப்பின் கருத்துக்கு ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. சபையின் சபாநாயகர் நான்சி, ‘‘ஆளும் குடியரசு கட்சி எம்பிக்களும், ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து இந்த கண்டன தீர்மானம் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு 240 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 187 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப் மறுப்பு

இதனிடையே இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக தாம் கருத்து தெரிவிக்கவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள் நாட்டை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறியதாக அதிபர் ட்ரம்ப் கூறி இருக்கிறார்.

Related Stories: