அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கினை முடித்துவைத்துள்ளது. வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளதால் அது மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Advertising
Advertising

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் கடந்த திங்கட்கிழமையன்று உச்சநீமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனைத்து வகையிலும் கடைப்பிடிக்கவே தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை தேசிய தகவல் மையத்துக்கு வழங்கும் பணி மற்றும் மாவட்ட நிர்வாக பணியாளர்கள் இதுபோன்ற பணிகளில் தீவிரமாக இருந்ததாலும், சில மாவட்டங்களில் வறட்சி நிவாரண பணிகள் போன்ற தவிர்க்க இயலாத சில காரணங்களாலும் மேலும் 60 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. எனவே, மேலும் 60 நாட்கள் கூடுதலாக வழங்குமாறு கோரப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அவகாசம் வழங்குமாறு கோரப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதை நிராகரிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் ஆணையம் உடனே வாக்காளர் பட்டியலை மாநிலதேர்தல் ஆணையத்துக்கு தர உத்தரவிட வேண்டும் என்றும் 6 மாதமாக வாக்காளர் பட்டியலை கொடுக்காமல் இழுத்தடிப்பதில் உள்நோக்கும் இருக்கிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: