செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து பயணிகள் போராட்டம்

காஞ்சிபுரம்: செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வழியே செல்லும் ரயில்கள் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதை தொடர்ந்து பயணிகள் ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு மற்றும் பாலூர் ரயில் நிலையங்களில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பாலூர் ரயில் நிலையத்தில் மற்ற ரயில்களுக்கு வழி விடுவதற்காக அடிக்கடி பாண்டிச்சேரி விரைவு ரயில் மற்றும் அரக்கோணம் பயணிகள் ரயில் தினமும் 2 மணி நேரம் நிற்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதை தொடர்ந்து வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் ஒரகடம் கார் தொழிற்சாலைகளில் இருந்து சென்னைக்கு தினசரி சரக்கு ரயில்களை நிறுத்தி 1 மணி நேரத்திற்கும் மேலாக கார்களை ஏற்றுவதால் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்களும் மற்றும் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் ரயில்களும் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதால் பணி முடிந்து சென்றவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். மேலும் இதனால் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து செங்கல்பட்டு மற்றும் பாலூர் ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் முன்பு அமர்ந்து பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பயணிகள் களைந்து சென்றனர்.

Related Stories: