கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தில் முடிவு எடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் உள்ளது : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜினாமாவை ஏற்காத சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்

கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக குமாராசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும்கட்சி மீது அதிருப்தி கொண்ட 14 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கொடுத்த கடிதத்தின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்துவருவதாக எம்எல்ஏக்கள்  சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு

அம்மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி,சபாநாயகர் தரப்பு மூத்த வக்கீல்  அபிஷேக் மனு சிங்வி,குமாரசாமி தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவான் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது :  உச்சநீதிமன்றம்

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, அனிருதா போஸ் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு விவரம்

நீதிபதிகள் : கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது.

நீதிபதிகள் : ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு எந்த கால வரையறையும் நிர்ணயிக்க முடியாது.

நீதிபதிகள் : எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தில் முடிவு எடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் உள்ளது.

நீதிபதிகள் : எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்க எந்த தடையும்  இல்லை.

நீதிபதிகள் : ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது.

நீதிபதிகள் : நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது எம்எல்ஏக்களின் விருப்பம்.

நீதிபதிகள் : 15 எம்எல்ஏக்களின் மீது எடுக்கும் நடவடிக்கையை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும்.

நீதிபதிகள் : சபாநாயகரே ஒரு காலக்கெடு நிர்ணயித்து எம்எல்ஏக்கள் ராஜினாமா பற்றி முடிவெடுக்க வேண்டும்.

நீதிபதிகள் : எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பான சட்டப் பிரச்சனை குறித்து தீர விசாரித்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது.

நீதிபதிகள் : கர்நாடக சட்டமன்றத்தில் நாளை திட்டமிட்டப்படி குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரலாம்.

Related Stories: